தனது திருமணம் அடுத்த மாதம் கோவாவில் நடைபெறவுள்ளதாக கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.
ஆண்டனி தட்டில் என்பவரை கீர்த்தி சுரேஷ் கடந்த 15 வருடங்களாகக் காதலித்து வருவதாகவும் இந்தக் காதல் தற்போது திருமணம் வரை வந்துள்ளதாகவும் கீர்த்தி சுரேஷ் அண்மையில் தெரிவித்தார்.
கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி தட்டிலின் திருமணம் டிசம்பர் 11 அன்று கோவாவில் உள்ள ரிசார்டில் நடைபெறவுள்ளதாகவும், இதில் கீர்த்தி சுரேஷின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்துகொள்ளவுள்ளார்கள் என்றும் தகவல் வெளியானது.
திருமணத் தேதி குறித்து விரைவில் கீர்த்தி சுரேஷ் அதிகாரபூர்வமாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதனை உறுதி செய்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.
திருப்பதிக்குச் சென்ற கீர்த்தி சுரேஷ் கோயிலுக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்தபோது, “நான் நடித்த பேபி ஜான் படம் வெளியாகவுள்ளது. மேலும், என்னுடைய திருமணம் அடுத்த மாதம் கோவாவில் நடைபெறவுள்ளது, அதற்காக கோயிலுக்கு வந்தேன்” என்று தெரிவித்துள்ளார்.