சுசித்ரா மற்றும் பிரபல ஊடகத்துக்கு நடிகர் கார்த்திக் குமார் நோட்டீஸ்

சுசித்ராவின் நேர்காணல் காணொளியை நீக்கக் கோரியும் நோட்டீஸ்.
‘ஏவம்’ கார்த்திக்
‘ஏவம்’ கார்த்திக்@evamkarthik

தன்னைப் பற்றி பேசிய கருத்துகள் அனைத்தையும் திரும்பப் பெற்று, மன்னிப்பு கேட்காவிட்டால் குற்றவியல் அவதூறு வழக்கு தொடுக்கப்படும் என முன்னாள் மனைவி சுசித்ராவுக்கு நடிகர் கார்த்திக் குமார் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

மேலும், சுசித்ராவின் நேர்காணலை ஒளிபரப்பிய யூடியூப் சேனல்களுக்கு எதிராகவும் சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

பாடகியும், கார்த்திக் குமாரின் முன்னாள் மனைவியுமான சுசித்ரா அண்மையில் இரு யூடியூப் சேனல்களுக்க நேர்காணல் அளித்திருந்தார். இதில், கார்த்திக் குமார் குறித்தும் தமிழ்த் திரைத் துறை குறித்து ஏராளமான குற்றச்சாட்டுகளை, விமர்சனங்களை அவர் முன்வைத்திருந்தார். தனுஷ், த்ரிஷா, ஆண்ட்ரியா, ரஜினியின் மகள் ஐஸ்வர்யா என ஏராளமான நட்சத்திரங்கள் குறித்தும் அவர் பேசியிருந்தார்.

சுசித்ராவின் கருத்துகள் இணையத்தில் பெரிதளவில் பகிரப்பட்டு வருகின்றன. இதைத் தொடர்ந்து, கார்த்திக் குமார் பேசியதாக இணையத்தில் ஒரு ஆடியோ கசிந்தது. சுசித்ரா பேசியதில் உண்மையில்லை என்றும், இணையத்தில் கசிந்த ஆடியோவில் இருக்கும் குரல் தன்னுடையது அல்ல என்றும் நடிகர் கார்த்திக் குமார் விளக்கம் கொடுத்தார்.

இந்த நிலையில், நேர்காணலில் தான் கூறிய கருத்துகள் அனைத்தையும் உடனடியாகத் திரும்பப் பெற்று, பொது மன்னிப்பை வெளியிட வேண்டும் என்று சுசித்ராவுக்கு அவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இல்லாதபட்சத்தில் சுசித்ரா மீது குற்றவியல் அவதூறு வழக்கு தொடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், நேர்காணல் எடுத்த யூடியூப் சேனல், பொய்யான அவதூறு கருத்துகளைச் சொல்ல வைக்க சுசித்ராவைத் தூண்டும் வகையில் கேள்விகளை எழுப்பியதாகவும், சம்பந்தப்பட்ட நபர்களின் புகழ் குறித்தும் உண்மையைக் குறித்தும் கவலை கொள்ளாமல் வெறும் பரபரப்புக்காகவே வெளியிடப்பட்டுள்ளது. நேர்காணல் வெளியிடப்படுவதற்கு முன்பு, இந்தக் குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மை குறித்து சரிபார்க்க எவ்வித முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் கார்த்திக் குமார் தெரிவித்துள்ளார்.

சுசித்ராவின் நேர்காணல் காணொளியை நீக்குவது தொடர்புடைய நோட்டீஸ் சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல் மற்றும் யூடியூப் நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in