அன்றாட வாழ்க்கையில் பொருள் தேடி இடைவிடாது ஓடிக்கொண்டிருக்கும் நாம், ஒரு சிறிய இடைவேளை எடுத்து ஊர்ப்பக்கம் போக வேண்டும், உறவுகளைப் பார்க்க வேண்டும், மண் வரலாறுகளை வாசிக்க வேண்டும் என்று பேசுவதுண்டு. இப்படி பேசிக்கொண்டிருக்கும் நாம் இந்த உரையாடல்களைக் கொண்டு ஒரு படத்தைக் கண்முன் எடுத்துக் காட்டினால் எப்படி இருக்கும்..?
மனதில் எதுவும் வைத்துக்கொள்ளாமல், எதையும் பொருட்படுத்திக்கொள்ளாமல் மிக இயல்பாக இருக்கக்கூடிய கிராமத்துக் கதாபாத்திரமாக கார்த்தி. நகரத்திலிருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றுக்காக தஞ்சாவூர் அருகேவுள்ள நீடாமங்கலம் செல்லும் தனிமையை விரும்பக்கூடிய, தேவையற்ற உரையாடல்களைத் தவிர்க்கக்கூடிய கதாபாத்திரமாக அரவிந்த் சுவாமி. இருவரும் ஓர் இரவில் சந்தித்துக்கொண்டு என்னவெல்லாம் பேசுவார்கள், எதையெல்லாம் பகிர்ந்துகொள்வார்கள் என்பதுதான் 177 நிமிடங்களில் உருவாகியுள்ள மெய்யழகன்.
தமிழ் சினிமாவில் சமீப நாள்களில் மூன்று மணி நேரம் என்றால் ரசிகர்களிடத்தில் ஓர் அச்சம் ஏற்படுகிறது. அதுவும் மூன்று மணி நேர படத்தில் பாடல், சண்டை, வன்முறை, காதல் என எதுவும் இல்லையென்றால் நிச்சயம் ஓர் ஐயம் எழலாம். ஆனால், பெரிதளவில் பொறுமையைச் சோதிக்காமல், சலிப்பு தட்டும் வகையில் இல்லாமல் நல்ல திரையனுபவத்தைத் தரக்கூடிய உரையாடலாகவே படத்தை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் பிரேம் குமார்.
இது சிறுகதையாகத் தொடங்கி, நாவலாக வடிவம் பெற்று அடுத்ததாக திரைக்கதையாக மாறியிருக்கிறது. படம் பார்க்கும்போது இதை உணர முடிந்தது. திரைக்கதையாக மாறும்போது பெரிய மாற்றம் எதுவும் இல்லாமல் இறுதிக்காட்சி வரை அழைத்துச் செல்வதற்கு ஒரு விஷயத்தை மட்டும் ஒளித்துவைத்து சுவாரஸ்யம் சேர்த்திருக்கிறார்கள்.
மூன்று மணி நேர உரையாடல் மூலம் உறவுகளிடத்தில் இருக்கும் உணர்வுகளைப் பேசிச் சென்றிருக்கிறார் பிரேம்குமார். அதுமட்டுமின்றி தமிழர்களான நம் வரலாற்றை அறிந்துகொள்வது, தமிழ் மண்ணில் நிகழ்ந்த போர்கள், தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் (ஈழம், விடுதலைப் புலிகள், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு) போன்ற விஷயங்களையும் தொட்டுச் சென்றிருக்கிறார்.
படத்தில் உரையாடல் அதிகம் என்பதால், மற்ற அம்சங்களான ஒலிப்பதிவு, ஒளிப்பதிவு, பின்னணி இசைக்கு வேலை அதிகம். புத்தகம் வாசிக்கும்போது நமக்குள் வாசிப்புக்கேற்ப காட்சிகள் உருவாகும். திரைமொழியில் உரையாடல் என்பதால் அந்தக் காட்சி உருவாக்கம் நம்முள் எழ ஒலிப்பதிவைச் சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஒளிப்பதிவு அழகியலாக உள்ளது. தஞ்சையைக் காட்டியதாகட்டும், டெல்டா நிலங்களைக் காட்டியதாகட்டும் அனைத்திலும் அழகியல் ஜொலிக்கிறது. மேகக் கூட்டங்கள் நகர்வதன் மூலம் நகரும் நிழலைக்கூட மிக அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். இதற்குப் பாராட்டுகளென்றாலும், சில இடங்களில் மிக இயல்பாக ஷாட்களை வைத்திருந்தால் உரையாடல்களின் இன்னும் யதார்த்த உணர்வுகள் இருந்திருக்கும்.
காட்சியைப் பார்த்து ரசிகர்கள் உணர்ச்சிவசப்படலாம். ஆனால், காட்சிக்குள் இருக்கும் துணைக் கதாபாத்திரங்கள் உணர்ச்சிவசப்படும்போது, அவர்களுக்கென்று தனித்தனியே க்ளோஸ் அப் ஷாட்கள் வைப்பது நிகழ்கால சினிமாவுக்குத் தேவையா என்ற கேள்வி எழுகிறது. குறைந்தபட்சம் படத்தொகுப்பிலாவது இவற்றை நீக்கியிருக்கலாம். இதை நீக்க வேண்டாம் என்ற முடிவு இயக்குநருடையதா படத்தொகுப்பாளருடையதா என்று தெரியவில்லை.
நடிகர்களைப் பொறுத்தவரை இந்தக் கதைக்கு மிகச் சரியான தேர்வாக கார்த்தியும், அரவிந்த் சுவாமியும் இருக்கிறார்கள். கார்த்தியின் கதாபாத்திரம் சற்று சிக்கலானது. பேசக்கூடிய அளவு கூடினால் எரிச்சலூட்டும், அளவு குறைந்தால் சோர்வடையச் செய்யும். ஆனால், இதை மிகச் சிறப்பாகக் கையாண்டு படம் முழுக்க உரையாடலை மிக அழகாகக் கொண்டு சென்றிருக்கிறார். அரவிந்த் சுவாமியும் அப்படிதான். பெரிய சலசலப்பு இல்லாமல் இருப்பதை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். சில இடங்களில் குற்ற உணர்வு ஏற்பட்டதைப்போல உணர்ந்து நடித்தாக வேண்டும். அதைச் சிறப்பாகக் கண்முன் கொண்டு வந்திருக்கிறார்.
மற்ற கதாபாத்திரங்களுக்குக் கூடுதல் முக்கியத்துவங்களைக் கொடுத்திருக்கலாம் என்ற உணர்வு வருகிறது. வழக்கம்போல் இரு கதாபாத்திரங்களுக்கிடையே நகரும் கதை என்றால் மற்ற கதாபாத்திரங்கள் சில இடங்களில் வரும் சில இடங்களில் வராது. இதைத் தவிர்க்கும் வகையில் காட்சிகளை அமைத்திருக்கலாம். அதேவேளையில், பழைய நினைவுகளை உணர்த்துவதற்காக சில அம்சங்கள் படத்தில் இடம்பெறுகின்றன. அவற்றை அப்படியே வைத்திருக்காமல், அதற்கென்று தனி கவனம் செலுத்தி ஷாட்களிலும், வசனங்களிலும் முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்திருந்தால் அதே யதார்த்த உணர்வு நீடித்திருக்கும்.
நகர்ப்புற வாழ்க்கையில் தேவைக்காக இடைவிடாது ஓடிக்கொண்டிருக்கும் நாம் அனைவரும் சுய வரலாற்றையும், தமிழ்/தமிழர் வரலாற்றையும் திரும்பிப் பார்க்க வேண்டும். இவற்றின் உணர்வுகள் மற்றும் முக்கியத்துவங்களை உணர வேண்டும். இரு வரலாறுகளிலிருந்தும் நாம் தொடர்பற்றதாகிவிடக் கூடாது என்பதை இரு கதாபாத்திரங்களின் உரையாடல் மூலம் நன்றாகவே சொல்லியிருக்கிறார் பிரேம் குமார்.