கார்த்தி நடிக்கும் ‘மெய்யழகன்’ படம் வருகிற செப்டம்பர் 27 அன்று வெளியாகிறது. இப்படம் தெலுங்கில் ‘சத்யம் சுந்தரம்’ என்ற பெயரில் வெளியாகிறது.
இந்நிலையில் இப்படத்தில் புரமோஷன் நிகழ்ச்சி ஹைதராபாதில் நடைபெற்றது.
அதில் தொகுப்பாளர் கார்த்தியிடம் லட்டு குறித்து கேள்வி எழுப்பிய போது, “லட்டு குறித்து இப்போது பேச வேண்டாம். அது சர்ச்சைக்குரிய விஷயமாக தற்போது உள்ளது. எனவே லட்டு வேண்டாம்” என்று பதிலளித்தார்.
இதைத் தொடர்ந்து இது குறித்து பேசிய நடிகரும், ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண், “சினிமா நிகழ்ச்சியில் லட்டு குறித்து கேலி செய்வதா? லட்டு சர்ச்சைக்குரிய விஷயம் என்கிறார்கள். நடிகர்களாக அவர்களை மதிக்கிறேன். சனாதன தர்மத்தை பற்றி பொது இடத்தில் பேசுவதற்கு முன்பு ஒரு முறைக்கு நூறு முறை சிந்திக்க வேண்டும்” என்றார்.
இதன் தொடர்ச்சியாக பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் கார்த்தி.
இது குறித்த எக்ஸ் பதிவில், “பவன் கல்யாண் மீது மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறேன். நான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்கிறேன். வெங்கடேஸ்வரரின் பக்தராக, நான் நமது பாரம்பரியங்களைக் கடைப்பிடிக்கிறேன்” என்று கார்த்தி பதிவிட்டுள்ளார்.