
காந்தாரா சாப்டர் 1 படம் வெளியான 2 வாரங்களில் உலகளவில் ரூ. 717.50 கோடி வசூலித்துள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் கன்னடத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற படம் ‘காந்தாரா’. இந்தப் படத்தில் சப்தமி கவுடா, கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அதன் வெற்றியைத் தொடர்ந்து ‘காந்தாரா சாப்டர் 1’ கடந்த அக்டோபர் 2 அன்று வெளியானது.
ருக்மிணி வசந்த், ஜெயராம், குல்சன் தேவய்யா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படத்தை ஹோம்பளே ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.
துளு நாட்டார் வழக்கு தெய்வங்கள், நிலவுரிமை மற்றும் இறை நம்பிக்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இப்படம், பிரமாண்ட காட்சிகள் மற்றும் பின்னணி இசைக்காக ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்நிலையில் படம் வெளியான 2 வாரங்களில் இப்படம் உலகளவில் ரூ. 717.25 கோடி வசூலை எட்டியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. முன்னதாக காந்தாரா படம் வெளியாகி 78 நாள்களில் உலகளவில் ரூ. 450 கோடி வசூலித்திருந்த நிலையில், முதல் வாரத்திலேயே காந்தாரா சாப்டர் 1 அதனை முறியடித்திருந்தது. தற்போது பான் இந்தியா அளவில் ரஜினியின் 2.0, சல்மான் கானின் சுல்தான், பாகுபலி முதல் பாகம் ஆகிய படங்களின் வாழ்நாள் சாதனைகளை முறியடித்துள்ளது. கன்னட திரையுலகில் அதிக வசூலைப் பெற்ற படங்களின் பட்டியலில் கேஜிஎஃப்-க்கு அடுத்தபடியாக காந்தாரா சாப்டர் 1 இரண்டாவது இடத்தில் உள்ளது.