
துபாயில் இருந்து தங்கத்தை கடத்தி வந்த கர்நாடக காவல்துறை டிஜிபியின் மகளும், நடிகையுமான ரன்யா ராவ் பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
நேற்றைக்கு முந்தைய தினம் (மார்ச் 3) துபாயில் இருந்து எமிரேட்ஸ் விமானத்தில் பெங்களூருவிற்கு வருகை தந்த கன்னட நடிகை ரன்யா ராவிடம் மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். இதன் தொடர்ச்சியாக அவரது உடையில் மறைத்து வைக்கப்பட்டு சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட ரூ. 12 கோடி மதிப்பிலான 14.8 கிலோ தங்கம் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது.
ரகசிய தகவலின் அடிப்படையில் ரன்யா ராவிடம் தங்கத்தை கைப்பற்றிய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள், அவரை பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். இதைத் தொடர்ந்து அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டது. அதன்பிறகு பெங்களூருவில் உள்ள வருவாய் புலனாய்வுத் துறை அலுவலகத்திற்கு விசாரணைக்காக அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.
தொடர்ச்சியாக சர்வதேச பயணம் மேற்கொண்ட ரன்யா ராவ் வருவாய் புலனாய்வுத்துறையின் கண்காணிப்பு வலையத்தில் கொண்டுவரப்பட்டார். 15 நாட்களில் 4 முறை துபாய் சென்று வந்ததன் பெயரில் அவரது நடவடிக்கைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டன. அதற்குப் பிறகு இந்த கைது சம்பவம் அறங்கேறியுள்ளது.
கன்னடம், தமிழ் உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்துள்ள ரன்யா ராவின் தந்தையான ஐபிஎஸ் அதிகாரி ராமசந்திர ராவ், கர்நாடக மாநில காவல்துறை வீட்டு வசதி வாரியத்தின் டிஜிபியாக உள்ளார். இந்த கடத்தலில் ராமசந்திர ராவ் அல்லது வேறு யாருக்காவது தொடர் உள்ளதா என்ற கோணத்தில் வருவாய் புலனாய்வுத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.