அக்டோபர் 10 அன்று வேட்டையன் படம் வெளியாவதே சரியாக இருக்கும் என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
‘96’ படத்தை இயக்கிய பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த் சாமி உட்பட பலர் நடிக்கும் படம் ‘மெய்யழகன்’.
சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இசை - கோவிந்த் வசந்தா.
இப்படம் செப்டம்பர் 27 அன்று வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று கோவையில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட சூர்யா கங்குவா வெளியீட்டு தேதி குறித்த புதியத் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
சூர்யா பேசியதாவது:
“நான் பிறக்கும்போதே சினிமாவில் நடிக்கத் தொடங்கியவர் ரஜினி. 50 ஆண்டுகளாக தமிழ் சினிமாவின் அடையாளமாக அவர் இருக்கிறார். எனவே, மூத்தவருக்கு மரியாதை கொடுக்கும் வகையில் அக்டோபர் 10 அன்று வேட்டையன் படம் வெளியாவதே சரியாக இருக்கும். கங்குவா ஒரு குழந்தை. அந்த குழந்தை வெளியாகும் தினத்தை நீங்கள் பண்டிகையாக கொண்டாடுவீர்கள் என நம்புகிறேன்” என்றார்.
ஏற்கெனவே, சூர்யாவின் கங்குவா படமும் அக்டோபர் 10-ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
முன்னதாக, கங்குவா படத்தின் தயாரிப்பாளரான ஞானவேல் ராஜா "ரஜினியுடன் போட்டி போடவேண்டும் என்ற எண்ணம் தனக்கு இல்லை" என்று பேட்டியளித்தார்.
இந்நிலையில் சூர்யாவும் இவ்வாறு பேச, கங்குவா படத்தின் வெளியீட்டு தேதி தள்ளிப்போகும் என்பது ஏறத்தாழ உறுதியாகி உள்ளது.