‘எமர்ஜென்சி’ படத்துக்கு இன்னுமும் தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை என்று அப்படத்தை இயக்கியுள்ள கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.
பாஜக எம்பியும் நடிகையுமான கங்கனா ரணாவத் இயக்கி நடித்துள்ள படம் ‘எமர்ஜென்சி’. இப்படம் வருகிற செப்டம்பர் 6 அன்று வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில் நடந்த ஒரு சில சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் ‘எமர்ஜென்சி’ படத்துக்கு இன்னுமும் தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை என்று கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.
இது குறித்த பதிவில் அவர் கூறியதாவது:
“எமர்ஜென்சி படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் கொடுக்கப்பட்டதாக தகவல்கள் வருகின்றன. அது உண்மையில்லை. படத்தின் தணிக்கை முடிந்துவிட்டது, ஆனால் இன்னும் தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை. ஏனெனில் தணிக்கை குழுவுக்கு கொலை மிரட்டல்கள் வருகின்றன. இந்திரா காந்தியை கொலை செய்தது உட்பட சில காட்சிகளை நீக்கச் சொல்லி மிகுந்த அழுத்தத்தை தருகின்றனர். இதை எல்லாம் நீக்கிவிட்டு நாங்கள் எதைக் காட்டவேண்டும் என்று தெரியவில்லை”.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.