அஜித், சூர்யா படங்களும் மறுவெளியீட்டுக்குத் தயாராகின்றன: தாணு
@2D Entertainment

அஜித், சூர்யா படங்களும் மறுவெளியீட்டுக்குத் தயாராகின்றன: தாணு

"2026-ல் தெறி மற்றும் கபாலி படத்தை வெளியிடுகிறேன்."
Published on

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், காக்க காக்க படங்களையும் மறுவெளியீடு செய்யவுள்ளதாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு சச்சின் மறுவெளியீடு வெற்றி விழாவில் அறிவித்துள்ளார்.

விஜய், ஷாலினி நடிப்பில் ஜான் மகேந்திரன் இயக்கத்தில் கடந்த 2005-ல் வெளியான படம் சச்சின். கலைப்புலி எஸ். தாணு இப்படத்தைத் தயாரித்திருந்தார். 20 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த வாரம் சச்சின் மறுவெளியீடு செய்யப்பட்டது. ரசிகர்களின் உற்சாக வரவேற்பில் படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

படத்தின் மறுவெளியீட்டு வெற்றி விழா இன்று கொண்டாடப்பட்டது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு அடுத்தடுத்து வெளியிடவுள்ள படங்களின் பட்டியலை வெளியிட்டார்.

"நேற்று முன்தினம் ராஜீவ் மேனனை அழைத்துப் பேசினேன். அஜித் நடித்துள்ள படம் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன். இந்தப் படத்தை மறுவெளியீடு செய்வதற்கான வேலையில் இருக்கிறேன். அடுத்து சச்சினைப்போல எல்லோரும் கேட்கும் படம் காக்க. இயக்குநர் கௌதமும் பலமுறை என்னை அழைத்துப் பேசியிருக்கிறார். இதற்கானப் பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதைத் தொடர்ந்து, 2026-ல் தெறி மற்றும் கபாலி படத்தை வெளியிடுகிறேன்.

புதிய படங்களை வெளியிடுவதற்கானப் பணியில் வாடிவாசல் தயாராகி வருகிறது.

சச்சின் 350 திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளது. படம் முதலில் வெளியானதைவிட தற்போது அதிகம் வெளயாகியிருக்கிறது. காட்சிகளும் திரைகளும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. இந்தியாவில் மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலும் இதே நிலை தான். முதலில் வெளியானபோது கௌரவமான லாபம் என்றால், மறுவெளியீட்டில் அதைப்போல 10 மடங்கு லாபம்" என்றார் கலைப்புலி எஸ். தாணு.

சச்சின் படம் 2005-ல் வெளியானபோது 250-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானதாக அவர் தெரிவித்தார்.

logo
Kizhakku News
kizhakkunews.in