
என் சாதனையை முறியடித்ததற்கு வாழ்த்துகள் என்று குழந்தை நட்சத்திரம் த்ரிஷா தோசருக்கு கமல் ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் 4 வயதே ஆன த்ரிஷா தோசர் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதைப் பெற்றார். மராட்டியத்தில் சுதாகர் ரெட்டி இயக்கத்தில் பிரபல இயக்குநர் நாகராஜ் மஞ்சுலே நடிப்பில் வெளியான படம் ‘நாள் - 2’. இப்படத்தில் சிமி என்ற குழந்தைக் கதாபாத்திரத்தில் நடித்தார் த்ரிஷா தோசர். அப்போது அவருக்கு இரண்டே வயது என்று கூறப்படுகிறது.
இதையடுத்து அவருக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. அவருடன் சேர்த்து 5 குழந்தை நட்சத்திரங்கள் அவ்விருதைப் பெற்றதாகத் தெரிய வருகிறது. ஆனால், தனது 4-வது வயதில் த்ரிஷா தோசர் தேசிய விருதைப் பெற்றுள்ளார்.
இந்நிலையில், த்ரிஷா தோசருக்கு தனது வாழ்த்துச் செய்தியைக் கமல் ஹாசன் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்:-
“அன்புள்ள செல்வி த்ரிஷா தோசர். உங்களுக்கு என் மிகப்பெரும் பாராட்டுகள். நீங்கள் என் சாதனையை முறியடித்துவிட்டீர்கள். எனது முதல் விருதை நான் பெறும்போது எனக்கு 6 வயது ஆகி இருந்தது. நீங்கள் இன்னும் நெடுந்தூரம் செல்ல வேண்டும். உங்கள் அசாத்திய திறன் மீது தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருங்கள். உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களுக்கும் என் பாராட்டுகள்”
என்று தெரிவித்துள்ளார்.
களத்தூர் கண்ணம்மா படத்திற்காக 1961-ல் கமல் ஹாசன் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதைப் பெற்றிருந்தார். அதைக் குறிப்பிட்டு அவர் இப்பதிவை வெளியிட்டுள்ளார்.