ரஜினி 173-ல் புதியவர்களுக்கும் வாய்ப்புண்டு: சுந்தர் சி விலகல் குறித்த கேள்விக்கு கமல் பதில் | Kamal Hassan |

ரஜினிக்குப் பிடித்த கதையை இயக்குவது தான் எனக்கு ஆரோக்கியம், அவருக்குப் பிடிக்கும் வரை...
ரஜினி 173-ல் இருந்து சுந்தர் சி விலகல் குறித்து கமல் ஹாசன் கருத்து
ரஜினி 173-ல் இருந்து சுந்தர் சி விலகல் குறித்து கமல் ஹாசன் கருத்து
1 min read

ரஜினி 173 படத்தில் புதிய இயக்குநர்களுக்கும் வாய்ப்பிருக்கிறது என்று கூறிய கமல் ஹாசன், ரஜினிக்குப் பிடிக்கும் வரை நாங்கள் கதை கேட்டுக் கொண்டிருப்போம் என்று தெரிவித்துள்ளார்.

ரஜினியின் 173-வது படத்தை கமல் ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. அதை இயக்குநர் சுந்தர் சி இயக்குவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது. மேலும் படத்திற்கு ‘தலைவர் 173’ என்று தற்காலிகமாகப் பெயரிடப்பட்டிருந்தது. ஆனால், கடந்த நவம்பர் 13 அன்று, அப்படத்தில் இருந்து விலகுவதாக திடீரென்று அறிவித்தார் சுந்தர் சி. “தவிர்க்க முடியாத காரணங்களால் இத்தகைய பெருமை வாய்ந்த தயாரிப்பில் இருந்து விலகும் கடுமையான முயற்சியை எடுக்கிறேன்” என்று அவரது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சுந்தர் சி விலகல் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல் ஹாசன் விளக்கமளித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-

“ரஜினியை வைத்து தயாரிக்கும் படத்தில் இருந்து சுந்தர் சி விலகியது குறித்து அவர் விளக்கிவிட்டார். என்னுடைய கருத்து, நான் முதலீட்டாளன். என்னுடைய நட்சத்திரத்துக்குப் பிடித்த கதையை எடுப்பதுதான் எனக்கு ஆரோக்கியமானது. ரஜினிகாந்துக்குப் பிடிக்கும் வரை நாங்கள் கதை கேட்டுக்கொண்டே இருப்போம். கதை நன்றாக இருந்தால் புதியவர்களுக்கும் வாய்ப்பிருக்கிறது. நானும் ரஜினியும் இணைந்து நடிக்க இன்னொரு கதையையும் தேடிக் கொண்டிருக்கிறோம்.

பிஹார் வெற்றியை வெற்றியாளர்கள் பார்த்துக்கொள்ளட்டும். அது நேர்மையாக வந்ததா என்றுதான் நாம் பார்க்க வேண்டும். அங்கு கிடைத்திருக்கும் மாபெரும் வெற்றி என்பது வெற்றியாளர்களின் சந்தோஷம். அதில் நமக்குச் சந்தோஷம் இருக்கிறதா என்பதைத்தான் நாம் பார்க்க வேண்டும். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மக்களுக்கு பல இடங்களில் இன்னும் தெளிவாகப் புரியாமல் இருக்கின்றன. அவற்றைப் புரிய வைக்க வேண்டியது ஊடகங்களின் கடமை. என்னுடைய கடமையும் கூட. என்னால் இயன்றவரை நான் அதைச் செய்கிறேன். அதற்கு ஊடகங்களும் ஒத்துழைக்க வேண்டும்.

புதிதாகக் கட்சி தொடங்குபவர்கள் கூட திமுகவுடன் தான் போட்டி என்று சொல்கிறார்கள் என்றால் இலக்கை உயர்வாக வைக்க வேண்டும் என்பதற்காகத்தான். நடிப்பில் கூட சிறந்த நடிகரைப் போலவே என் மகன் வர வேண்டும் என்றுதான் பெற்றோர் விரும்புவார்கள். ஏழைகள் கூட தங்கள் குழந்தைகளை மகாராஜா என்றுதான் கொஞ்சுவார்கள். ஆசைக்காக அப்படிச் சொல்லிக் கொள்ளலாம்.” என்றார்.

Summary

Kamal Haasan stated that new directors also have opportunities in Rajini's 173rd film and we are listening to stories. We will keep listening till Rajini likes one.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in