கர்நாடகத்தில் தக் லைஃப் படத்தை வெளியிடுவது தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கமல் ஹாசன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நாயகனுக்குப் பிறகு கமல் ஹாசன் மற்றும் மணி ரத்னம் கூட்டணியில் ஜூன் 5-ல் வெளியாகிறது தக் லைஃப். சிம்பு, த்ரிஷா, அஷோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், நாசர், அபிராமி எனப் பலர் இதில் நடித்துள்ளார்கள். ஏ.ஆர். ரஹ்மானின் பாடல்கள் ஏற்கெனவே ஹிட் அடித்து வருகிறது.
தக் லைஃப் படத்தின் முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. எனினும், கர்நாடகத்தில் படம் வெளியாவது இன்னும் சிக்கலில் உள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தமிழிலிருந்து கன்னடம் பிறந்ததாக கமல் ஹாசன் பேசியது கர்நாடகத்தில் பெரும் சர்ச்சையாக மாறியது.
கர்நாடகத்தில் கட்சி வேறுபாடின்றி கமல் ஹாசனின் கருத்தை அனைவரும் எதிர்த்து வருகிறார்கள். இவருக்கு எதிராகக் கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில், மன்னிப்பு கேட்க வேண்டும், மன்னிப்பு கேட்டால் மட்டுமே தக் லைஃப் கர்நாடகத்தில் வெளியாகும் என்ற எச்சரிக்கை குரல்களும் வந்தன.
அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது, தவறு செய்திருந்தால் மட்டுமே மன்னிப்பு கேட்பேன் என வெவ்வேறு இடங்களில் கமல் ஹாசனும் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். கமல் ஹாசன் மன்னிப்பு கேட்காவிட்டால் தக் லைஃப் படம் திரையிடப்படாது என கர்நாடக திரைப்பட வர்த்தகச் சபை அறிவித்துள்ளது. கன்னட அமைச்சரும் இதை வழிமொழிந்துள்ளார்.
இந்நிலையில், கமல் ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் தக் லைஃப் வெளியீடு தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ராஜ்கமல் ஃபிலிம்ஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், "கமல் ஹாசனின் பேச்சு தவறாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் கர்நாடகம் இடையிலான அன்பை வெளிப்படுத்தும் நோக்கத்திலேயே கமல் ஹாசன் அவ்வாறு பேசினார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக பார் அண்ட் பெஞ்ச் செய்தி வெளியிட்டுள்ளது.
ஜூன் 5 அன்று திரைப்படம் பாதுகாப்பாகத் திரையிடப்படுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு நிவாரணங்கள் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் சார்பில் கோரப்பட்டுள்ளது. இந்த மனு இன்னும் விசாரணைக்கு வரவில்லை.