கங்குவா மீது திட்டமிட்ட அவதூறு: ஜோதிகா

கங்குவா மீது திட்டமிட்ட அவதூறு: ஜோதிகா

கங்குவா திரைப்படத்தில் உள்ள நல்ல விஷயங்களை விமர்சகர்கள் கவனிக்காமல் விட்டது ஏன்?
Published on

சமீபத்தில் வெளியான கங்குவா திரைப்படம் மீது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அது குறித்து பதிவிட்டுள்ளார் ஜோதிகா. அவர் பதிவிட்டவை பின்வருமாறு,

`சினிமாவை காதலிக்கும் ஜோதிகாவாக இதைப் பதிவிடுகிறேன். நடிகர் சூர்யாவின் மனைவியாக அல்ல.

கங்குவா மிகச்சிறந்த திரைப்படம்.

ஒரு நடிகராகவும், சினிமாவை முன்னெடுத்துச் செல்வதற்கான கனவுக்காகவும் உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன் சூர்யா.

நிச்சயமாக முதல் அரை மணி நேரம் சுமாராக இருந்தது. சத்தமும் அதிக இரைச்சலாக இருந்தது. பெரும்பான்மையான இந்திய படங்களில் குறை என்பது இருக்கும். அதுவும் இப்படிப்பட்ட புதிய முயற்சிகளை மேற்கொண்ட படத்தில் குறைகள் இருப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது.  முழுமையான 3 மணி நேரத்தில் அதுவும் முதல் அரை மணி நேரம் மட்டுமே.

கங்குவாவுக்கு எதிரான எதிர்மறை விமர்சனங்கள் குறித்து ஆச்சரியமடைந்தேன். பழைய திரைக்கதை, இரட்டை அர்த்த வசனங்கள், பெண்களுக்கு எதிரான கருத்துகள், நம்பமுடியாத வகையிலான சண்டைக் காட்சிகள் இருக்கும் பிற பெரிய பட்ஜெட் படங்கள் மீது இது போன்ற எதிர்மறை விமர்சனங்கள் மேற்கொள்ளப்படவில்லை.

நியாயமாக கூறவேண்டும் என்றால் கங்குவா முழுமையான சினிமா அனுபவமாக இருந்தது. இதற்கு முன்பு தமிழ் சினிமாவில் இல்லாத அளவுக்கு ஒளிப்பதிவை மேற்கொண்டிருக்கிறார் வெற்றி பழனிசாமி.

கங்குவா திரைப்படத்தில் உள்ள நல்ல விஷயங்களை விமர்சகர்கள் கவனிக்காமல் விட்டது ஏன்? படத்தின் 2-வது பாதியில் இருந்த பெண்கள் சண்டைக்காட்சி, சிறுவனின் அன்பு, கங்குவாவுக்கு துரோகம் செய்தது போன்றவை? விமர்சனம் மேற்கொள்ளும்போது நல்ல காட்சிகளை அவர்கள் மறந்துவிட்டனர் என நினைக்கிறேன். இதற்குப் பிறகு, இத்தகைய நபர்கள் பேசுவதைக் கேட்பதும், நம்புவதும் தேவையில்லை என எண்ணுகிறேன்.

கங்குவா படத்தின் முதல் காட்சி முடியும் முன்பே எதிர்மறை விமர்சனம் மேற்கொள்ளப்பட்டது மிகவும் வருத்தத்திற்குரியது (பல குழுக்கள் திட்டமிட்டு அவதூறு பரப்பியதுபோல் உள்ளது) 3டியை உருவாக்க எடுத்த முயற்சிக்கும், இப்படிப்பட்ட படக்காட்சிகளுக்கும் நிச்சயமாக படக்குழுவினருக்கு பாராட்டுகளை அளித்திருக்கவேண்டும்.

கங்குவா படக்குழுவினர் நிச்சயமாக பெருமைப்பட்டுக் கொள்ளலாம். எதிர்மறை விமர்சனங்களை முன்வைக்கின்றவர்கள் அதை மட்டுமே மேற்கொள்வார்கள், சினிமாவை உயர்த்தும் எந்த முயற்சியிலும் அவர்கள் ஈடுபடுவது இல்லை' என்றார்.

logo
Kizhakku News
kizhakkunews.in