
ஜாய் கிரிஸில்டா மீது மாதம்பட்டி ரங்கராஜ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், தன் குழந்தைக்கு நீதி கிடைக்க எந்த எல்லைக்கும் சென்று போராடுவேன் என்று ஜாய் கிரிஸில்டா தெரிவித்துள்ளார்.
பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னைத் திருமணம் செய்துவிட்டு, நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் ஏமாற்றிவிட்டதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா காவல்துறையில் புகார் அளித்தார். மேலும் தொடர்ந்து தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று சமூக ஊடகங்களிலும் பேட்டிகளிலும் மாதம்பட்டி ரங்கராஜ் மீது குற்றச்சாட்டுகளை வைத்து வந்தார்.
இந்நிலையில், ஜாய் கிரிஸில்டாவின் அவதூறு பேச்சுகளால் தமது நிறுவனத்திற்கு ரூ. 125 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், தன்னைப் பற்றி அவதூறு கருத்துகள் பரப்ப ஜாய் கிரிஸில்டாவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து சென்னையில் ஜாய் கிரிஸில்டா செய்தியாளர்களை இன்று (செப். 17) சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது -
“மாதம்பட்டி ரங்கராஜ் நிறுவனத்தின் தரப்பிலிருந்து என் மீது அவதூறு வழக்குத் தொடரப்பட்டுள்ளது. நான் போலியான குற்றச்சாட்டுகளை வைப்பதாகவும், அவதூறாகப் பேசுவதாகவும் அவர்கள் கூறுகிறார்கள். ஆனால், நான் எந்தப் போலியான குற்றச்சாட்டுகளையும் வைக்கவில்லை. நான் இந்தக் குழந்தைக்காக மட்டுமே போராடுகிறேன். இந்தக் குழந்தைக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே போராடுகிறேன்.
மாதம்பட்டி ரங்கராஜ் உயிரற்ற ஒரு விஷயத்திற்காகப் போராடுகிறார். ஆனால், உயிருள்ள எனக்கும், அவரது குழந்தைக்கும் அவர் எந்தப் பதிலும் சொல்லவில்லை. இன்று என்னையும் அவரது குழந்தையையும் நீதிமன்ற வாசலில் நிற்க வைத்துவிட்டார். நான் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்து இருபது நாட்கள் ஆகின்றன. ஆனால், அவர் செல்வாக்கு மிக்கவர் என்பதால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவர் நிறையப் பேருக்கு உணவு அளித்துள்ளதாகவும், நீதிபதிகளுக்கும் உணவு அளித்துள்ளதாகவும் வெளியில் பேசி வருகிறார். காசு பணம் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், தவறு செய்துவிட்டுத் தப்பித்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். நான் நீதி ஒன்றுக்காக மட்டுமே போராடுகிறேன்.
நான் வெளியிட்ட வீடியோக்களையும், பயன்படுத்திய ஹேஷ்டேக்குகளையும் நீக்கச் சொல்கிறார்கள். நான் எந்தத் தவறான தகவலையும் பதிவிடவில்லை. இந்தக் குழந்தையின் தந்தை மாதம்பட்டி ரங்கராஜ் என்பதை மட்டுமே நான் வெளிப்படுத்தினேன். திருமணம் செய்துகொண்டு, குழந்தைக்குத் தந்தை யார் என்று தெரியாமல் என்னால் வாழ முடியாது. நான் இதை வெளியே கொண்டு வந்ததால் என் மீது போலியான குற்றச்சாட்டுகளைக் கூறுகிறார்கள். நான் தவறு செய்யவில்லை. தவறு செய்தவர்கள் மகிழ்ச்சியாகச் சுற்றி வருகிறார்கள். ஆனால், ஒரு பெண் அந்தத் தவறைத் தட்டிக் கேட்க வெளியே வந்தால் அவதூறாகப் பேசுகிறார்கள்.
என் போன்ற ஒரு பெண் வெளியே வந்தால் அவதூறு பரப்புவீர்கள். அதனால்தான் பல பெண்கள் வெளியே வரத் தயங்குகிறார்கள். அவர்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கிப் போராடுகிறார்கள். நான் இன்று வெளியே வந்து போராடுவதால், என்னை அவதூறாகப் பேசுகிறார்கள். இருந்தாலும், நான் என் குழந்தைக்காகப் போராடுகிறேன். எனக்கு நீதி வேண்டும். நான் இந்தக் குழந்தைக்காக எந்த எல்லைக்கும் சென்று போராடுவேன். நீதி கிடைக்கும் வரை நான் போராடுவேன்"
இவ்வாறு தெரிவித்தார்.