எனது கணவர் மாதம்பட்டி ரங்கராஜுடன் சேர்ந்து வாழவே விருப்பம்: ஜாய் கிரிஸில்டா | Madhampatty Rangaraj

எனது குழந்தைக்காகவே நான் போராடி வருகிறேன், வேறு எதற்காகவும் போராடவில்லை.
ஜாய் கிறிசில்டா
ஜாய் கிறிசில்டாhttps://www.instagram.com/joycrizildaa/
2 min read

தனது கணவர் மாதம்பட்டி ரங்கராஜுடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும், தன் வயிற்றில் உள்ள குழந்தைக்கு அவரே தந்தை என்றும் சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ள பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா செய்தியாளர் சந்திப்பில் தகவல் தெரிவித்துள்ளார்.

பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜுக்கும், வழக்கறிஞர் ஸ்ருதி என்பவருக்கும் ஏற்கெனவே திருமணம் நடைபெற்று, இரு குழந்தைகள் உள்ளார்கள். ஆனால் இந்த தம்பதியருக்கு இடையே மனக்கசப்பு இருப்பதாகவும், இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்துகொண்டதாகவும், தாம் ஆறு மாதங்கள் கருவுற்று இருப்பதாகவும், அவரது ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டா கடந்த ஜூலை மாதம் அறிவித்தார்.

மாதம்பட்டி ரங்கராஜுடனான திருமண புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைதள கணக்கில் அவர் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று (ஆக. 29) ஜாய் கிரிஸில்டா புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியதாவது,

`நான் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா, மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி. காவல் ஆணையர் அலுவலகத்தில் நான் புகார் அளித்திருக்கிறேன். என்னுடைய கணவர் மாதம்பட்டி ரங்கராஜ் தற்போது என்னுடன் தொடர்பில் இல்லை. குழந்தைக்கும், எனக்கும் சேர்ந்து நான் போராட்டம் நடத்தி வருகிறேன். அதை புகாராகத் தெரிவித்திருக்கிறேன்.

அவர் என்னை ஏமாற்றியிருக்கிறார், இந்த குழந்தைக்கு பதில் தேவை. அவர்தான் இந்த குழந்தையின் தந்தை. நாங்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டு வருடங்கள் ஆகிறது. அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒன்றாக வாழ்ந்து வந்தோம், அது அனைவருக்கும் தெரியும்.

முதல் மனைவியை சட்டப்படி பிரிந்து வாழ்வதாக (Judicial Separation) அவர் என்னிடம் கூறினார். அவரை நம்பித்தான் திருமண உறவில் இணைந்தேன். இப்போது ஒன்றரை மாதமாக என்னை அவர் தொடர்புகொள்ளவில்லை. அதுக்காவே போராடிக்கொண்டிருக்கிறேன்.

அவர் என்னை தொடர்புகொள்ளவில்லை, தற்போது நான் ஏழு மாதங்கள் கர்ப்பமாக இருக்கிறேன், திடீரென என்னுடனான தொடர்பை அவர் நிறுத்திக்கொண்டார், எனக்கும் இந்த குழந்தைக்கும் பதில் தேவை, எனவே புகார் மனு அளித்துள்ளேன். அவரை தொடர்புகொள்ள அனைத்து வழிகளிலும் முயற்சி செய்தேன்.

அவரை என்னுடன் பேசவிடாமல் பலரும் தடுத்து வைத்திருக்கின்றனர். அது அவரது நண்பர்களாக இருக்கலாம், தம்பியாக இருக்கலாம், குடும்ப உறுப்பினர்களாக இருக்கலாம்.

நான் அவருடன் வாழ விரும்புகிறேன், அவர்தான் எனது குழந்தைக்குத் தந்தை. அதை புகாரில் தெரிவித்துள்ளேன். சென்னையில்தான் எங்கள் திருமணம் நடைபெற்றது.

எம்.ஆர்.சி. நகரில் உள்ள திருவீதியம்மன் கோவிலில் நடந்தது. அவர் தொழிலில் ஈடுபட்டு வருகிறார், மேலும் அவரது பெற்றோர் என்னிடம் கேட்டுக்கொண்டனர் எனவே திருமண புகைப்படங்களை நான் வெளியிடாமல் இருந்தேன்.

எனது குழந்தைக்காகவே நான் போராடி வருகிறேன், வேறு எதற்காகவும் போராடவில்லை. இந்த குழந்தையின் தந்தை எனது கணவர் மாதம்பட்டி ரங்கராஜ். கடைசியாக ஒரு வாரத்திற்கு முன்பு அவரை சந்தித்தேன், ஆனால் அவர் பேசத் தயாராக இல்லை. நான் பேச முயற்சி செய்தபோது அவர் என்னைத் தாக்கினார்.

அனைவரது முன்னிலையிலும் அவர் தாக்கினார். என்னிடம் பேசத் தயாராக இல்லை என்றும், அவருடன் இருப்பவர்கள் என்னிடம் பேசுவதை தடுப்பதாகவும் அவர் கூறினார். அவர் என்னுடைய கணவர் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. அவருடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன்’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in