கெளரி கிஷன் சர்ச்சை: வருத்தம் தெரிவித்தார் பத்திரிகையாளர் ஆர்.எஸ். கார்த்திக் | Gouri Kishan |

எனக்கு எந்த உள்நோக்கமும் இல்லை. இந்த நிகழ்வுக்கு நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்....
வருத்தம் தெரிவித்த பத்திரிகையாளர் ஆர்.எஸ். கார்த்திக் (இடது) நடிகை கொரி கிஷன் (கோப்புப்படம்) (வலது)
வருத்தம் தெரிவித்த பத்திரிகையாளர் ஆர்.எஸ். கார்த்திக் (இடது) நடிகை கொரி கிஷன் (கோப்புப்படம்) (வலது)
1 min read

நடிகை கௌரி கிஷன் உடல் எடை குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய பத்திரிகையாளர் ஆர்.எஸ். கார்த்திக் வருத்தம் தெரிவித்து காணொளி வெளியிட்டுள்ளார்.

அதர்ஸ் படத்தின் செய்தியாளர் சந்திப்பில் கதாநாயகி நடிகை கௌரி கிஷனிடம் அவரது உடல் எடை குறித்து யூடியூபர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்குக் கடுமையான பதிலளித்த கௌரி கிஷன், “இது முட்டாள்தனமான கேள்வி, என் உடல் எடையைத் தெரிந்துகொண்டு என்ன செய்யப் போகிறீர்கள்? ஆண் நடிகர்களைப் பார்த்து பத்திரிகையாளர்கள் யாரும் இப்படிக் கேட்பதில்லை. நடிகைகளிடம் மட்டும் இப்படியான தனிப்பட்ட, உடல் சார்ந்த கேள்விகளை ஏன் கேட்கிறீர்கள்?” என்று பதிலளித்தார். அதன்பிறகு கேள்வி கேட்ட பத்திரிகையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அந்தக் காணொளி இணையத்தில் பரவியது.

இதையடுத்து தென்னிந்திய நடிகர் சங்கம், சென்னை பத்திரிகையாளர் சங்கம் உள்ளிட்ட தரப்பில் இருந்து நடிகைக்கு ஆதரவாக அறிக்கைகள் வெளியிடப்பட்டன.

இதற்கிடையில், சம்பவம் குறித்து நீண்டதொரு பதிவை வெளியிட்டுள்ள நடிகை கௌரி கிஷன், “சம்பந்தப்பட்ட நபரை குறிவைத்து துன்புறுத்துவது என் நோக்கம் அல்ல என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இதில் தொடர்புடைய பத்திரிகையாளர் ஆர்.எஸ். கார்த்திக் வருத்தம் தெரிவித்து காணொளி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

“கடந்த இரண்டு மூன்று நாள்களாக நான் மன உளைச்சலில் இருக்கிறேன். அதற்கான காரணம் நடிகை கௌரி கிஷன் பத்திரிகையாளர் சந்திப்பில் நடந்த சம்பவம். நான் வேறு விதமாக கேள்வி கேட்டேன். அது வேறு விதமாகப் புரிந்துகொள்ளப்பட்டு, முட்டாள்தனமான கேள்வி என்று சொல்லப்பட்டதால் நான் அது குறித்து மீண்டும் கேள்வி எழுப்பும்படி ஆகிவிட்டது. நடிகையைக் கதாநாயகன் தூக்கினர் என்பதற்காக விளையாட்டுத் தனமாக அவரது எடை என்னவென்று கேட்டோம். ஆனால் அது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது. ஒருவரைத் தாக்க வேண்டும் என்பது எனது எண்ணமல்ல என்று நடிகை கௌரி கிஷன் கூறியுள்ளார். எனக்கும் அவர் மனதை நோகடிக்க வேண்டும் என்பது எண்ணமல்ல. இந்த நிகழ்வால் அவருக்கு ஏதாவது மன வருத்தம் ஏற்பட்டிருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு எந்த உள்நோக்கமும் இல்லை. இந்த நிகழ்வுக்கு நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

Summary

Journalist R.S. Karthik, involved in the incident where actress Gouri Kishan's body weight was questioned during a press conference, has released a video expressing his regret.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in