இளையராஜாவின் முதல் சிம்பொனி வெளிவராதது ஏன்?: எழுத்தாளர் ஜெயமோகன் விளக்கம்

"அந்த சிம்பொனியில் இளையராஜா சேர்த்திருந்த இந்திய இசையம்சம் அதன் வெளியீட்டாளர்களுக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை".
ஜெயமோகன்
ஜெயமோகன்

இளையராஜாவின் முதல் சிம்பொனி வெளிவராதது ஏன்? என்பது குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் விளக்கம் அளித்துள்ளார்.

35 நாள்களில் ஒரு சிம்பொனியை எழுதி முடித்து விட்டதாகக் கூறி காணொளி ஒன்றை சமீபத்தில் இளையராஜா வெளியிட்டார். முன்னதாக, இளையராஜா ஏற்கனவே 1988-ல் ஒரு சிம்பொனி அமைத்ததாக அறிவித்து பாராட்டுவிழா எல்லாம் நடைபெற்ற நிலையில் அது வெளியாகவே இல்லை. இந்நிலையில், இளையராஜா சிம்பொனி இசை அமைப்பதாக அறிவித்திருப்பதை ஒட்டி மீண்டும் விவாதங்கள் நிகழ்ந்ததைத் தொடர்ந்து இளையராஜாவின் முதல் சிம்பொனி வெளிவராதது குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் விளக்கம் அளித்துள்ளார்.

ஜெயமோகன் கூறியதாவது: “எனக்கு தனிப்பட்ட முறையில் தெரிந்தது, அந்த சிம்பொனியுடன் சம்பந்தப்பட்டவரிடம் இருந்தே தெரிந்துகொண்டது இதுதான். அந்த சிம்பொனியில் இளையராஜா சேர்த்திருந்த இந்திய இசையம்சம் அதன் வெளியீட்டாளர்களுக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை. அதை நீக்கவேண்டும், அல்லது கலவையிசை (ஃப்யூஷன்) என்று பெயரிடவேண்டும் என்றார்கள்.

இது சிம்பொனி என்ற வடிவின் அழகியல் சம்பந்தமான விவாதம். மேலைநாட்டில் இலக்கியம், இசை எல்லாவற்றிலும் ‘எடிட்டர்’களின் கருத்து வலுவானது. ஆனால் தன் இசைமேல் இன்னொருவரின் கருத்தை இளையராஜா ஊடுருவலாகவே எடுத்துக்கொண்டார். விவாதிக்கவே மறுத்து விலகிவிட்டார். அவர் எப்போதுமே அவருடைய இசைமேல் இன்னொருவருடைய கருத்தை, திருத்ததை இம்மியளவும் ஏற்பவர் அல்ல.

தன் வாழ்நாளில் எல்லா கணமும் படைப்பூக்கத்துடன் இருப்பது, எந்த அகவையிலும் புதிய பெருங்கனவுகளை நோக்கிச் செல்வது ஆகிய இரண்டுமே படைப்பாளியின் முதன்மைச் சவால்கள். அதில் இளையராஜா அனைவருக்கும் மாபெரும் முன்னுதாரணம்” என்றார்.

ஜெயமோகனின் விளக்கம்: https://www.jeyamohan.in/200894/

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in