ஒருவர் மீது தவறான குற்றச்சாட்டுகளை வைப்பது மிகவும் சுலபம் என்று நடிகர் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார்.
மலையாள நடிகைகளுக்கு பாலியல் ரீதியான நெருக்கடிகள் உள்ளதாக நீதிபதி ஹேமா ஆணையம் பரபரப்பு அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து மலையாள கலைஞர்கள் மீது அடுத்தடுத்து வைக்கப்படும் பாலியல் குற்றச்சாட்டுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் ஜெயசூர்யா மீது நடிகைகள் அளித்த புகாரின் அடிப்படையில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதைத் தொடர்ந்து தன்னுடைய பிறந்த நாளில் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார் ஜெயசூர்யா.
ஜெயசூர்யா குறிப்பிட்டுள்ளதாவது:
“எனது பிறந்த நாளில் என்னுடன் ஆதரவாக இருக்கும் அனைவருக்கும் நன்றி. என் மீது தவறான இரண்டு புகார்கள் எழுந்துள்ளது. இதனை சட்ட ரீதியாக எதிர்கொள்ள முடிவு செய்துள்ளேன். ஒருவர் மீது தவறான குற்றச்சாட்டுகளை வைப்பது மிகவும் சுலபம், ஆனால் அது மிகுந்த வலியை கொடுக்கும். பொய் என்பது உண்மையை விட வேகமாக பயணிக்கும். ஆனால், இறுதியில் உண்மை தான் ஜெயிக்கும். நான் குற்றவாளி அல்ல என்பதை நிரூபிப்பதற்கான சட்ட நடவடிக்கைகள் நிச்சயம் தொடரும். நமது நீதித்துறை மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இந்தப் பிறந்த நாளை வேதனையான ஒரு பிறந்த நாளாக மாற்றிய அனைவருக்கும் நன்றி”.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.