நடிகர் ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து வழக்கை நவம்பர் 27-க்கு ஒத்திவைத்து சமரச தீர்வு மையம் உத்தரவிட்டுள்ளது.
ஜெயம் ரவி - ஆர்த்தி காதல் திருமணம் ஜூன் 4, 2009-ல் நடைபெற்றது. இவர்களுக்கு ஆரவ், அயான் என இரு மகன்கள் உள்ளார்கள். ஜெயம் ரவி, ஆர்த்தி இடையே பிரச்னை நிலவி வருவதாக ஊடகங்களில் தொடர்ச்சியாகத் தகவல்கள் கசிந்து வந்தன.
கடந்த செப்டம்பர் 9 அன்று அறிக்கை வாயிலாக இதை உறுதிபடுத்தினார் ஜெயம் ரவி. எனினும், விவாகரத்து குறித்து ஜெயம் ரவி தனிச்சையாக எடுத்த முடிவு என ஆர்த்தி ரவி பதில் அறிக்கை வெளியிட்டார்.
இதனிடையே, மனைவி ஆர்த்தியிடமிருந்து விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார் ஜெயம் ரவி. இந்த மனு மீதான விசாரணை குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. வழக்கு விசாரணையின் போது ஜெயம் ரவி நேரில் ஆஜரானார். ஆர்த்தி காணொளி வாயிலாக ஆஜரானார்.
இருவரையும் சமரச தீர்வு மையத்தில் பேச்சுவார்த்தை நடத்துமாறு குடும்ப நல நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, இன்று மதியத்துக்குப் பிறகு சமரச தீர்வு மையத்தில் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இருவரும் சுமார் 10 நிமிடங்கள் மட்டுமே சமரசப் பேச்சில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. காணொளி வாயிலாக ஆஜரான ஆர்த்தி, உடல்நலம் சரியில்லாததால் பேச்சுவார்த்தையை ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொண்டதாகத் தெரிகிறது. இதன் அடிப்படையில் இந்த வழக்கை நவம்பர் 27-க்கு ஒத்திவைத்து சமரச தீர்வு மையம் உத்தரவிட்டது.