ஜனநாயகன் படம் மறு தணிக்கைக்கு அனுப்பி வைப்பு: விரைவில் வெளியாக வாய்ப்பு | JanaNayagan |

மறு தணிக்கைக்குப் பிறகு பட்டியலிடப்படும் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படும்...
ஜனநாயகன் படம் மறு தணிக்கைக்கு அனுப்பி வைப்பு: விரைவில் வெளியாக வாய்ப்பு
ஜனநாயகன் படம் மறு தணிக்கைக்கு அனுப்பி வைப்பு: விரைவில் வெளியாக வாய்ப்பு
1 min read

ஜனநாயகன் படத்தை படக்குழு மறு தணிக்கைக்கு அனுப்பி வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்கக் கோரி தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது தனி நீதிபதி பி.டி. ஆஷா முன்பு கடந்த ஜனவரி 7 அன்று விசாரணைக்கு வந்தது. அதன் தீர்ப்பில் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

தணிக்கை வாரியம் மேல் முறையீடு

உடனே இதனை எதிர்த்து தணிக்கை வாரியத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை கடந்த ஜனவரி 9 அன்று விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவாத்சவா மற்றும் நீதிபதி அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது. அதன்பின் வழக்கின் விசாரணை நடந்து வந்தது.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

இதற்கிடையில் படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரித் தயாரிப்பு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. அவசர வழக்காக தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு, கடந்த ஜனவரி 15 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இது தொடர்பான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரணைக்குப் பட்டியலிட்டுள்ளதால் தலையிட விரும்பவில்லை என்று கூறிய உச்ச நீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்தது.

சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

இதனடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்த நிலையில், கடந்த ஜனவரி 27 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், படத்திற்கு உடனடியாகத் தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதி பி.டி. ஆஷாவின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், தணிக்கை வாரியம் பதிலளிக்க உரிய கால அவகாசம் அளித்து மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்று தனி நீதிபதி பி.டி. ஆஷாவுக்கு உத்தரவிடப்பட்டது.

படத்திற்கு மறு தணிக்கை

இந்நிலையில், ஜனநாயகன் படத்திற்குச் சான்றிதழ் கோரி மறு தணிக்கைக்கு படக்குழு அனுப்பி வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மறு தணிக்கைக்குப் பிறகு பட்டியலிடப்படும் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படும் என்றும், அதனால் படத்தின் நீளம் 20 நிமிடங்கள் வரை குறையலாம் என்றும் கூறப்படுகிறது. இதன்மூலம் அடுத்த 20 நாள்களுக்குள் ஜனநாயகன் படத்தின் தணிக்கைச் சான்றிதழ் விவகாரம் முடிவுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

Reports have emerged that the film crew has sent the film JanaNayagan for re-censorship.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in