
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காரணமாக டைடானிக், அவதார் பட இயக்குநர் ஜேம்ஸ் கேம்ரூன் நியூசிலாந்துக்கு குடியேறவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு, அந்நாட்டில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் அரங்கேறி வருகின்றன. சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் வெளியேற்றப்பட்டு வருவது, உலக நாடுகளுக்கு வழங்கி வந்த நிதி நிறுத்தப்படுவது என பல்வேறு மாற்றங்கள் டிரம்ப் ஆட்சியில் நிகழ்ந்துள்ளன. இந்நிலையில் டைடானிக், அவதார் படங்களை எடுத்த புகழ்பெற்ற இயக்குநர் ஜேம்ஸ் கேம்ரூன் அமெரிக்காவிலிருந்து நியூசிலாந்துக்கு குடியேறவுள்ளார்க் கூறினார்.
நியூசிலாந்து நாட்டின் ஊடகம் ஒன்றுக்கு ஜேம்ஸ் கேம்ரூன் அளித்த பேட்டியொன்றில் கூறியதாவது:
"அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் மீண்டும் தேர்வாகியுள்ளது பயம் உண்டாக்கக் கூடிய ஒன்று. டிரம்ப் வருகைக்குப் பின் அனைத்தும் மாறி வருகின்றன. வரலாற்று ரீதியாக அமெரிக்கா எதற்கெல்லாம் துணை நின்றதோ, அதற்கெல்லாம் துணை நிற்கவில்லையெனில் இனி எதற்கும் துணை நிற்காது. இது மிகவும் குறுகிய மனப்பான்மை கொண்டது. தங்களுடையச் சொந்த நலனுக்காக இந்த எண்ணத்தை மிகவும் வேகமாகப் புகுத்தி வருகிறார்கள்.
அங்கு பாதுகாப்பு உணர்வுடன் என்னால் இருக்க முடியுமா என்பது எனக்குத் தெரியவில்லை.
அமெரிக்காவை விட்டு வெளியேறும் பட்சத்தில், குறைந்தபட்சம் நாளிதழ்களின் முதல் பக்கத்தில் நான் தினந்தோறும் அவர் முகத்தைப் பார்க்க வேண்டாம். நியூசிலாந்து பத்திரிகைகளில் ஒரு நல்ல விஷயம் உள்ளது. குறைந்தபட்சம் இங்கு மூன்றாவது பக்கத்தில் தான் வரும். அமெரிக்காவில் தப்பிக்கவே முடியாது. ஒரு கார் திரும்பத் திரும்ப விபத்துக்குள்ளாவதைப் பார்ப்பதற்குச் சமம்.
நான் கனடாவில் வளர்ந்தவன். கனடா மற்றும் நியூசிலாந்து இடையே மக்கள் நடந்துகொள்ளும் விதத்தில் நிறைய ஒற்றுமைகளைப் பார்க்கிறேன். இங்கு இருப்பதைக் கொஞ்சம் கூடுதலாகவே விரும்புகிறேன் நான். மனிதர்களிடத்தில் உள்ளார்ந்து ஒரு மரியாதை இருக்கிறது. மரியாதைக்கான ஓர் எதிர்பார்ப்பும் உண்டு. இது எனக்கு மிகவும் பிடிக்கும். என் குழந்தைகளும் இதை அனுபவிக்க வேண்டும்" என்றார் ஜேம்ஸ் கேம்ரூன்.