ஜெய் ஹோ பாடலுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கவில்லையா?: சுக்விந்தர் சிங் விளக்கம்

ஆஸ்கர் நாயகன் என்கிற பட்டத்தை ஏ.ஆர். ரஹ்மானுக்கு பெற்றுத் தந்த பாடல் ‘ஜெய் ஹோ’.
ஏ.ஆர். ரஹ்மான்
ஏ.ஆர். ரஹ்மான் ANI

ஜெய் ஹோ பாடலை பாடகர் சுக்விந்தர் சிங் தான் இசையமைத்தார் என்ற ராம் கோபால் வர்மாவின் கருத்தை, சுக்விந்தர் சிங் மறுத்துள்ளார்.

ஆஸ்கர் நாயகன் என்கிற பட்டத்தை ஏ.ஆர். ரஹ்மானுக்கு பெற்றுத் தந்த படம் ‘ஸ்லம்டாக் மில்லியனர்’. இப்படத்தில் இடம்பெற்ற ‘ஜெய் ஹோ’ பாடலுக்காக இரண்டு ஆஸ்கார் விருதுகள் கிடைத்தது.

இந்நிலையில் பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா சமீபத்தில் ஃபிலிம் கம்பேனியனுக்கு அளித்த பேட்டியில், “ஜெய் ஹோ பாடலுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கவில்லை, பாடகர் சுக்விந்தர் சிங் தான் இசையமைத்தார்” என்றார். இது மிகப்பெரிய பேசுபொருளாக மாறிய நிலையில் இது குறித்த விளக்கத்தை சுக்விந்தர் சிங் கொடுத்துள்ளார்.

ஹிந்துஸ்தான் டைம்ஸுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: “ஜெய் ஹோ பாடலுக்கு ஏ.ஆர். ரஹ்மான் தான் இசையமைத்தார், நான் பாட மட்டும் தான் செய்தேன். ராம் கோபால் வர்மா ஏதாவது தவறான தகவல்களை கேட்டிருக்கலாம்” என்றார். ஏற்கெனவே சுக்விந்தர் சிங் 2017-ல் அளித்த ஒரு பேட்டியில் இது குறித்து பேசியுள்ளார்.

சுக்விந்தர் சிங் பேசியதாவது: “ஆரம்பத்தில் இயக்குநர் சுபாஷ் காய் இயக்கிய ‘யுவ்ராஜ்’ படத்திற்காக இந்த பாடல் வேறொருவரின் குரலில் உருவாக்கப்பட்டது. ஆனால், இந்த பாடல் தனது படத்துக்கு சரியாக இருக்காது என சுபாஷ் சொன்னார்.

இதைத் தொடர்ந்து இந்த பாடலை மிகவும் சிறப்பாக எழுதியிருந்த குல்ஸாரிடம் இந்த பாடலை நான் பாடுவதாகக் கூறினேன். பின்னர் எனது ஸ்டுடியோவில் அந்த பாடலைப் பாடி ரஹ்மானுக்கு அனுப்பினேன். நீண்ட நாள்களுக்குப் பிறகு அவர் எனக்கு தொலைபேசி மூலம் அழைத்து இந்த பாடலை ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்தில் பயன்படுத்துவதாகக் கூறினார்” என்றார்.

மேலும் இயக்குநர் சுபாஷுக்கு, ரஹ்மான் வேறொரு பாடலை இசையமைத்துக் கொடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in