
புஷ்பா 2 இயக்குநர் சுகுமார் இல்லம் மற்றும் அலுவலகத்தில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா 2, இதுவரை ரூ. 1,500 கோடிக்கும் மேல் வசூலித்து அசாத்தியமான சாதனையைப் படைத்து வருகிறது. இதனிடையே, தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர்கள் இல்லம் மற்றும் அவர்களுக்குத் தொடர்புடைய இடங்களில் வருமான வரித் துறையினர் நேற்று சோதனை நடத்தினார்கள்.
பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு, அவருடைய மகள் ஹன்சிகா ரெட்டி, தொழில் கூட்டாளி ஷிரிஷ் தொடர்புடைய இடங்களில் நேற்று சோதனை நடத்தப்பட்டது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் நவீன் யெர்னேனி மற்றும் ரவி ஷங்கர் ஆகியோருக்குத் தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.
தில் ராஜு தயாரிப்பில் கேம் சேஞ்சர் மற்றும் சங்ராந்திகி வஸ்துன்னம் படங்கள் அண்மையில் வெளியாகின. புஷ்பா 2 படத்தைத் தயாரித்தது மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம்.
இந்த வருமான வரித் துறை சோதனைகளைத் தொடர்ந்து, இன்று புஷ்பா 2 இயக்குநர் சுகுமாருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. வருமான வரித் துறை சோதனையின்போது, சுகுமார் ஹைதராபாத் விமான நிலையத்தில் இருந்ததாகவும், வருமான வரித் துறையினர் பாதுகாப்புடன் திரும்ப அவர் வீட்டுக்கு அழைத்து வரப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக வருமான வரித் துறை சார்பில் அதிகாரபூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.