முத்தக் காட்சிகள் வேண்டாம் என்றேன், ஆனால்...: மனம் திறந்த பிரதீப் ரங்கநாதன்

முத்தக் காட்சி என்பது ஒரு அன்பின்/காதலின் வெளிப்பாடாக இருந்தால், முகம் சுழிக்க மாட்டார்கள். ஓர் ஈர்ப்பின் வெளிப்பாடாக இருந்தால்...
முத்தக் காட்சிகள் வேண்டாம் என்றேன், ஆனால்...: மனம் திறந்த பிரதீப் ரங்கநாதன்
படம்: https://x.com/pradeeponelife
1 min read

தன் படத்தைக் குடும்பங்கள் பார்க்க வேண்டும் என்பதால், முத்தக் காட்சிகள் வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாக பிரதீப் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

கோமாளி, லவ் டுடே புகழ் பிரதீப் ரங்கநாதன் தற்போது அஷ்வத் இயக்கத்தில் டிராகன் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் பிப்ரவரி 21 அன்று திரைக்கு வருகிறது. இதனிடையே, விக்னேஷ் ஷிவன் இயக்கத்தில் எல்ஐகே படத்திலும் நடித்து வருகிறார்.

தற்போது டிராகன் படத்தின் விளம்பரப் பணிகள் நடைபெற்று வருகின்றன. படத்தின் டிரெய்லர் வெளியானவுடன் சிவகார்த்திகேயனின் டான் பட நீட்சியாக டிராகன் இருப்பதாக விமர்சனங்கள் வலுத்தன. படத்தில் நிறைய விஷயங்கள் இருப்பதாகவும் திரையரங்கத்தில் கிடைக்கும் அனுபவத்தைக் கெடுக்கக் கூடாது என்பதற்காகவே அவற்றை வெளியிடாமல் வைத்துள்ளதாகவும் இயக்குநர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது. அதே சமயம், பிரதீப் ரங்கநாதனின் முத்தக் காட்சிகளும் பெரும் பேசுபொருளானது.

அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பிரதீப் ரங்கநாதன் முத்தக் காட்சிகள் குறித்து விளக்கமளித்துள்ளார்.

"என் படத்தைக் குடும்பங்கள் பார்க்க வேண்டும் என்பது என் ஆசை. எனவே, முத்தக் காட்சிகள் வேண்டாம் என அஷ்வத் மற்றும் விக்னேஷ் ஷிவனிடம் கூறினேன். முத்தக் காட்சிகள் இருந்தால், குடும்பங்கள் படத்தைப் பார்க்கும்போது அசௌகரியமாக இருக்கலாம் என்றேன்.

இதற்கு அனிமல் பட வசூலைக் கவனியுங்கள் என்றார் விக்னேஷ் ஷிவன். அப்படியென்றால், அனைத்துக் குடும்பங்களும் அனிமல் படத்தைப் பார்க்க வந்துள்ளார்கள். குடும்பங்கள் படத்தைப் பார்க்க வராமல் இந்த அளவுக்கு வசூல் அடைந்திருக்காது. அனைத்தும் மாறிவிட்டன. குடும்பங்கள் இவற்றைப் பார்க்கிறார்கள். வெறும் முத்தம் தானே என்ற வகையில் விக்னேஷ் ஷிவன் கூறினார். இந்த வாதம் என்னைச் சிந்திக்க வைத்தது. இப்படியாக லியோ வரை நிறைய படங்களைக் குறிப்பிட்டு விக்னேஷ் ஷிவன் கூறினார்.

விஜய்க்கு மிகப் பெரிய அளவில் குடும்பங்களை உள்ளடக்கிய ரசிகர்கள் உள்ளார்கள். அனைவரும் அவருடையப் படத்தைப் பார்க்கிறார்கள். இது என்னைச் சமாதானம் செய்வதற்காக அஷ்வத் கூறியது. குடும்பங்கள் எதையும் நினைத்துக்கொள்ள மாட்டார்கள். லியோ படத்தின் வசூலைக் கவனிக்க வேண்டும். எனவே, குடும்பங்கள் முத்தக் காட்சிகளைத் தவறாக எடுத்துக்கொள்ளவில்லை என்றார் அஷ்வத். இதுவும் நல்ல வாதமாக இருந்தது.

பிறகு, முத்தக் காட்சிகள் கதைக்குத் தேவைப்படுகிறதா என்று சிந்திக்கத் தொடங்கினேன். முகம் சுழிக்கும் வகையில் முத்தக் காட்சிகள் இருக்குமா என்றும் யோசித்தேன். முத்தக் காட்சி என்பது ஒரு அன்பின்/காதலின் வெளிப்பாடாக இருந்தால், முகம் சுழிக்க மாட்டார்கள். ஓர் ஈர்ப்பின் வெளிப்பாடாக இருந்தால் குழந்தைகளுடன் வரும்போது முகம் சுழிப்பார்கள். எனவே, அன்பின்/காதலின் வெளிப்பாடாகத் தெரியும் வரை அது குடும்பம் சார்ந்தது என நான் நினைத்தேன்.

அஷ்வத் ஒரு முத்தக் காட்சியை விவரித்தார். அது காதலின் வெளிப்பாடாகவே உள்ளது. அந்த விதத்தில் குடும்பங்கள் இதை ஏற்றுக்கொள்ளத் தொடங்கிவிட்டார்கள்" என்றார் பிரதீப் ரங்கநாதன்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in