இந்தியன் 2 படத்துக்கு பேசிய பட்ஜெட்டை விட அதிகமாக செலவானதாக தெலுங்கு தயாரிப்பாளர் காட்ரகட்டா பிரசாத் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து 1996-ல் வெளியான படம் ‘இந்தியன்’. இப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. இதைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு ‘இந்தியன்-2’ படம் உருவானது.
இப்படத்தில் காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், எஸ்.ஜே. சூர்யா, சித்தார்த், பாபி சிம்ஹா, பிரியா பவானி ஷங்கர் போன்றோர் நடித்தனர். இசை - அனிருத். ஒளிப்பதிவு - ரவி வர்மன்.
இப்படம் கடந்த ஜூலை 12 அன்று வெளியான நிலையில் பெரும்பாலும் எதிர்மறையான விமர்சனங்களையே பெற்றது. வசூலும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை என்று தான் கூறவேண்டும்.
இந்நிலையில் தெலுங்கு திரையுலகின் மூத்த தயாரிப்பாளர் மற்றும் தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபையின் முன்னாள் தலைவருமான காட்ரகட்டா பிரசாத் சமீபத்தில் அளித்த பேட்டியில், இந்தியன் 2 படத்துக்கு பேசிய பட்ஜெட்டை விட அதிகமாக செலவானதாகத் தெரிவித்துள்ளார்.
ஐ ட்ரீம் என்டர்டெயின்மென்ட் சேனலுக்கு அளித்த பேட்டியில் அவர் பேசியதாவது: “தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபையின் தலைவராக நான் இருந்தபோது லைகா நிறுவனம் ஷங்கர் மீது குற்றம்சாட்டியது.
இந்தியன் 2 படத்துக்கு பேசிய பட்ஜெட்டை 70 சதவீத படப்பிடிப்பு கூட முடியாத நிலையில் செலவு செய்ததாகவும், மேலும் கார்ப்பரேட்டிடம் இருந்து உத்தரவு வராமல் படப்பிடிப்பை நடத்த மாட்டேன் என்று ஷங்கர் கூறியதாகவும் குறிப்பிடப்பட்டது.
இதன் பிறகு என்ன செய்வது என்று சுபாஷ்கரன் என்னிடம் கேட்டார்.
ஷங்கர் மீது புகார் அளிக்கிறேன், நீங்கள் முறைப்படி செய்ய வேண்டியதை செய்யுங்கள் என்றார்.
அதன் பிறகு அனைவரும் கலந்து பேசி ஒரு பட்ஜெட்டை முடிவு செய்து சமாதானம் ஆனார்கள். அந்த பட்ஜெட்டிலும் அவர்களால் படத்தை முடிக்க முடியவில்லை.
ஒப்பந்தத்தில் 236 கோடி ரூபாய் என இருந்தது. அதன் பிறகு கூடுதலாக 150 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டது. ஆனால் முடிவாக பட்ஜெட் 600 கோடி ரூபாய் என்கிறார்கள்.
உண்மை என்னவென்று இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் தான் தெரியும். அப்படம் முடிய 6 ஆண்டுகள் ஆனது”.
இவ்வாறு அவர் பேசினார்.