
மௌனம் பேசியதே நாடகத்திலிருந்து விலகுவதாக நடிகை ஜோவிதா லிவிங்ஸ்டன் அறிவித்துள்ளார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சி சேனலில் அண்மைக் காலமாக ஒளிபரப்பாகி வரும் நாடகம் மௌனம் பேசியதே. இந்த நாடகத்தில் துளசி என்கிற முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் ஜோவிதா. இந்த நிலையில், இந்த நாடகத்திலிருந்து விலகுவதாக ஜோவிதா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்ஸ்டகிராம் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
"நான் ஏற்று நடிக்கும் துளசி கதாபாத்திரம் எனக்குப் போதிய திருப்தியைத் தரவில்லை. அது சுயநலமிக்க கதாபாத்திரமாக எந்நேரமும் மன அழுத்தத்துடன் காணப்படும் கதாபாத்திரமாக நம் கலாசாரத்துக்கு எதிரானதாக உள்ளது. கதையின் முக்கியக் கதாபாத்திரம் சுயநலமிக்கதாக இருப்பது எனக்கும் பலருக்கும் சரியாகப்படவில்லை.
மாதக்கணக்கில் இடைவெளி இல்லாமல் படப்பிடிப்பில் பங்கெடுத்து வருகிறேன். நச்சுத்தன்மையுடைய சூழலாக இருப்பதால், முழுமையடையாததைப்போல ஓர் உணர்வு ஏற்படுகிறது. நேர்மையாகவும் சுயமரியாதையுடனும் வாழ வேண்டும் என்பது என் எண்ணம். இந்தக் குணங்களைப் பெற்று இது மாதிரியான மனிதராக இருக்க மிகக் கடுமையாக முயற்சித்துள்ளேன். ஆனால், அண்மைக் காலங்களில் இதிலிருந்து நான் தவறுவது எனக்கு ஏமாற்றமளிக்கிறது. எனவே, மௌனம் பேசியதே நாடகத்திலிருந்து விலகுகிறேன்.
நீங்கள் இதுநாள் வரை காட்டி வரும் அன்புக்கு நன்றி. மற்றொரு நாடகத்தில் விரைவில் உங்களைச் சந்திப்பேன்" என்று ஜோவிதா லிவிங்ஸ்டன் குறிப்பிட்டுள்ளார்.