
‘அமேடியஸ்’ படத்தை 50 முறைக்கும் அதிகமாகப் பார்த்திருப்பதாக இளையராஜா தெரிவித்துள்ளார்.
உலகின் மாபெரும் இசைக் கலைஞராகக் கருதப்படுபவர் ஆஸ்திரியாவைச் சேர்ந்த மொசார்ட். 1756-ல் பிறந்த இவர், இளம் வயதிலிருந்தே தனது இசைத் திறமையை வெளிப்படுத்தினார்.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக 1791-ல் தனது 35 வயதில் காலமானார். இவரின் வாழ்கையைக் குறித்து கடந்த 1984-ல் வெளியான ஹாலிவுட் படம், ‘அமேடியஸ்’. சிறந்த படம், சிறந்த நடிகர் உள்பட 8 ஆஸ்கர் விருதுகளை இது வென்றது.
இந்நிலையில் ‘அமேடியஸ்’ படத்தை 50 முறைக்கும் அதிகமாக பார்த்திருப்பதாக இளையராஜா தெரிவித்துள்ளார்.
கடந்த 2019-ல் சினிமா விகடனுக்கு அளித்த பேட்டி ஒன்றில் பேசிய இளையராஜா, “உலக சினிமாவில் நான் அதிகமுறை பார்த்த படம் ‘அமேடியஸ்’. 50 முறைக்கும் அதிகமாக அப்படத்தை நான் பார்த்திருக்கிறேன். அக்கதை மொசார்ட் என்ற இசையமைப்பாளர் குறித்த கதை என்பதால் அப்படத்தை அவ்வளவு முறை பார்க்கவில்லை.
அப்படத்தின் திரைக்கதை, வில்லன் கதாபாத்திரத்தின் நடிப்பு, அவர்கள் குறிப்பிட்ட விவரங்கள் அனைத்தும்தான் காரணம். ஒவ்வொரு சம்பவத்தையும், வில்லன் அவருடைய கோணத்தில் சொல்லும் ஒரு ஃப்ளாஷ் பேக் கதைதான் இப்படம்.
ஆனால், அதில் ஒவ்வொரு சின்ன சின்ன விவரங்களும் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. படத்தின் ஒவ்வொரு காட்சியும் ஒரு ஓவியம் போன்று இருந்தது” என்று தெரிவித்திருந்தார்.