
விரைவில் அடுத்த சிம்பொனிகளை எழுதப் போகிறேன் என்பதை தீபாவளி நற்செய்தியாக தெரிவிக்கிறேன் என்று இளையராஜா காணொளி வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக உள்ளவர் இளையராஜா. சமீபத்தில் லண்டனில் சிம்பொனி இசைத்த பெருமைக்காக அவருக்கு தமிழ்நாடு அரசு விழா எடுத்து கௌரவித்தது. மேலும், 50 ஆண்டு காலமாக இசைத்துறையில் அவரது சாதனையை பாராட்டி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது லண்டனில் இளையராஜா இசைத்த சிம்பொனி இசை, மேடையில் இசைக்கப்பட்டது.
தொடர்ந்து நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் ஹாசன் ஆகியோர் இளையராஜாவை பாராட்டி பேசினர். அதன் பிறகு காணொளி வெளியிட்ட இளையராஜா, விரைவில் லண்டனில் இசைத்த சிம்பொனியை பொதுமக்கள் முன்னிலையில் இசைக்கும் நிகழ்ச்சி நடத்தப்படும் என்று இளையராஜா காணொளி வெளியிட்டு அறிவித்திருந்தார்.
இந்நிலையில் தீபாவளிய முன்னிட்டு இன்று காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
“அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள். இந்த இனிய தீபாவளி நாளிலே உங்களுக்கெல்லாம் இன்னொரு செய்தியைச் சொல்ல விரும்புகிறேன். என் தாயாரின் நினைவு தினத்தை முடித்துவிட்டு எனது அடுத்த சிம்பொனிகளைத் தொடங்கலாம் என்றிருக்கிறேன். அத்துடன் புதிய படைப்பாக சிம்பொனிக் டான்சஸ் என்ற புதிய இசைக் கோர்வையையும் எழுதுவதாக இருக்கிறேன். இதை தீபாவளி நற்செய்தியாகத் தெரிவிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.