என் இனிய பொன் நிலாவே பாடலுக்கான பதிப்புரிமை இளையராஜாவுக்குக் கிடையாது என தில்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும், யுவன்ஷங்கர் ராஜா மறுஉருவாக்கம் செய்துள்ள என் இனிய பொன் நிலாவே பாடலை வெளியிடவும் வேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்துக்குத் தடை விதித்தது.
பா. விஜய் இயக்கத்தில் ஜீவா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் அகத்தியா. இந்தப் படத்துக்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஐஷரி கணேஷின் வேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் படத்தைத் தயாரித்துள்ளது.
இளையராஜா இசையமைத்த 100-வது படமான 1980-ல் வெளியான மூடு பனி படத்தில் என் இனிய பொன் நிலாவே பாடல் மிகவும் பிரபலமானது. இந்தப் பாடலை அகத்தியா படத்துக்காக யுவன்ஷங்கர் ராஜா மறுஉருவாக்கம் செய்திருந்தார்.
என் இனிய பொன் நிலாவே பாடல் உள்பட மூடு பனி படத்தின் ஒலிப்பதிவுகள் மற்றும் இசைப் பணிகளின் பதிப்புரிமை தங்கள் வசம் இருப்பதாகவும் முறையான அனுமதி இல்லாமல் இந்தப் பாடலைப் புதிய படத்தில் மறுஉருவாக்கம் செய்து பயன்படுத்தியதாகவும் சரிகம இந்தியா லிமிடெட் சார்பில் தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
என் இனிய பொன் நிலாவே பாடல் மறுஉருவாக்கம் செய்திருப்பது தொடர்பாக விளம்பரங்கள் மூலம் தெரியவந்ததாகவும், சட்டவிரோதமான இந்தச் செயலை நிறுத்துமாறு நோட்டீஸ் அனுப்பியும், எதிர்மனுதாரர்கள் பாடலை வெளியிட்டதாக சரிகம இந்தியா லிமிடெட் சார்பில் மனுவில் குறிப்பிடப்பட்டது.
மூடு பனி படத்தின் இசையமைப்பாளர் இளையராஜாவிடமிருந்து, பாடலை மறுஉருவாக்கம் செய்வதற்கான உரிமையைப் பெற்றுவிட்டதாக வேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் வாதிடப்பட்டது. மூடு பனி படத்துக்கான இசைப் பணிகளின் உரிமை தன் வசம் இருப்பதாக இளையராஜா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
சரிகம இந்தியா லிமிடெட் மற்றும் மூடு பனி படத் தயாரிப்பாளர் இடையே 1980-ல் கையெழுத்தான ஒப்பந்தம் குறித்து தில்லி உயர் நீதிமன்றம் ஆய்வு செய்தது. இதன் முடிவில் பாடலின் ஒலிப்பதிவு மற்றும் இசைப் பணிகளுக்கான பதிப்புரிமை படத் தயாரிப்பாளரால் சரிகம இந்தியா லிமிடெட்டுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தில்லி உயர் நீதிமன்றம் கண்டறிந்தது.
இதுதொடர்பாக உத்தரவிட்ட தில்லி உயர் நீதிமன்றம், இளையராஜா பாடலின் இசையமைப்பாளர் மட்டுமே. பாடலின் பாடலாசிரியர் இளையராஜா அல்ல. எனவே பாடலுக்கான உரிமையை இளையராஜா கோர முடியாது எனத் தீர்ப்பளித்தது. மேலும், மூன்றாவது தரப்புக்கு பாடலின் உரிமையை இளையராஜா வழங்க முடியாது என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதேசமயம், பாடலை மறுஉருவாக்கம் செய்ததில் குறிப்பிடத்தக்க செலவு ஆகியிருக்கும் என்பதால், அதனைக் கருத்தில் கொண்டு உரிமத்துக்கானக் கட்டணமாக ரூ. 30 லட்சம் டெபாசிட் செய்துவிட்டு, பாடலைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என வேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்துக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இது இறுதித் தீர்ப்பு அல்ல என்றும் நீதிமன்றம் அடிக்கோடிட்டுக் காட்டியது.
எனினும், உரிமத்துக்கானக் கட்டணத்தைச் செலுத்த முடியாது என்பதால், என் இனிய பொன் நிலாவே பாடலின் மறுஉருவாக்கம் இல்லாமலே படத்தை வெளியிட வேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாராகிவிட்டது.