
தமிழக மக்களுக்காக விரைவில் பெரிய மேடையில் சிம்பொனியை மீண்டும் இசைக்கப் போகிறேன் என்று இசையமைப்பாளர் இளையராஜா அறிவித்தார்.
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இசையமைப்பாளர் இளையராஜாவின் பொன்விழா ஆண்டு மற்றும் லண்டனில் சிம்பொனி இசைத்த சாதனையைப் பாராட்டும் வகையில் அரசு சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. அதில் முதல்வர் ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த், கமல் ஹாசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். நிறைவாக இளையராஜா பேசினார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது :
“உலக அளவில் இதுவரை தோன்றிய இசையமைப்பாளர்களில் யாருக்கும் ஒரு அரசு பாராட்டு விழா எடுத்ததாக எனக்குத் தெரியவில்லை. அதைச் செய்திருக்கும் தமிழக அரசுக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கும் நன்றி. நான் சிம்பொனி இசைக்க லண்டனுக்குச் செல்வதற்கு முன் என்னைச் சந்தித்து முதல்வர் வாழ்த்து கூறி அனுப்பினார். இசைத்துவிட்டுத் திரும்பி வரும்போது அமைச்சர் தங்கம் தென்னரசு மூலம் அரசு மரியாதையுடன் என்னை வரவேற்றார். இத்தனை அன்புக்கும் என் இசைதான் காரணமா என நெகிழ்ந்து போகிறேன்.
காரைக்குடியில் எனக்கு நடந்த பாராட்டு விழாவில் முன்னாள் முதல்வர் கருணாநிதி எனக்கு இசைஞானி என்ற பட்டத்தைக் கொடுத்தார். அவருடைய மகன் மு.க. ஸ்டாலின் எனக்கு அரசு சார்பில் விழா எடுத்து கௌரவிக்கிறார்.
இப்போது நீங்கள் கேட்ட சிம்பொனி இசை, எனது கற்பனையில் தோன்றியது. நான் அதை எழுத்து வடிவமாக எழுதிக் கொடுத்ததைத் தான் 87 கலைஞர்களும் இசைத்தார்கள். இது உங்கள் கற்பனைக்குள் என்னென்ன உணர்ச்சிகளைக் கொண்டு வந்திருக்கும் என்பதை என்னால் யூகிக்க முடிகிறது. சிம்பொனியை நான் எழுதியபோது எனக்கு பல கட்டுப்பாடுகள் இருந்தன. கிராமிய பின்னணியில் இருந்து வந்தவன் நான், அதன் இசை இதில் தெரியக் கூடாது. படங்களுக்கு இசையமைப்பவன் நான். படங்களின் பின்னணி இசைபோல் இது ஆகிவிடக்கூடாது. தமிழன், இந்தியன் என்ற எந்தக் கலாசாரச் சாயலும் இருக்கக் கூடாது. நான் கேட்டுப் பயின்ற சிம்பொனி மாமேதைகளின் படைப்புகளைப் போல் என் இசை இருக்கக் கூடாது. இத்தனை கட்டுப்பாடுகளுடன் இந்த சிம்பொனி இசைக் குறிப்புகளை 35 நாட்களில் எழுதி முடித்தேன். அதற்குக் காரணம், நான் என் வாழ்க்கையை இசைக்கே அர்ப்பணித்ததுதான். அதனால் என் குடும்பத்துடன் என்னால் நேரம் செலவிட முடியவில்லை.
அரசு சார்பில் விழா எடுத்து பாராட்டி விடலாமா என முதல்வர் ஸ்டாலின் என்னை இயல்பாகக் கேட்டார். அதற்கு நான் அப்போது லண்டனில் இசைத்த சிம்பொனியை மீண்டும் இசைக்க ஏற்பாடு செய்ய முடியுமா என்று கேட்டேன். செய்துவிடலாமே என்று முதல்வர் உடனே ஒப்புக் கொண்டார். ஆனால், இந்த 87 கலைஞர்களையும் இங்கே கூட்டுவது சுலபமான பணி அல்ல. அதற்குப் பின்னால் உழைத்த அனைவருக்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன்.
இன்று முதல்வரைப் போலவே நானும் ஓர் அறிவிப்பை வெளியிடுகிறேன். இங்கு குறைவானவர்களே என் சிம்பொனியை நேரில் கேட்டிருக்கிறீர்கள். இதைப் பதிவு செய்து கேட்பது, உண்மையான உணர்வைக் கொடுத்துவிடாது. அதனால், விரைவில் பெரிய மேடையில் தமிழக மக்களுக்காக நான் மீண்டும் சிம்பொனி இசைக்கப் போகிறேன். அதற்கான உதவிகளைத் தமிழக அரசு எனக்குச் செய்து கொடுக்கும் என்ற நம்பிக்கையில் சொல்கிறேன்”
இவ்வாறு பேசினார்.
Ilaiyaraaja | Ilaiyaraaja 50 | Symphony | MK Stalin |