இளையராஜாவின் பேரனும் கார்த்திக் ராஜாவின் மகனுமான யத்தீஷ்வர் ராஜா தனது பக்தி இசைத் தொகுப்பை இன்று வெளியிட்டார்.
இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜா. இவருடைய மகன் யத்தீஷ்வர் ராஜா. இவர் 6 நிமிடங்கள் கொண்ட பக்திப் பாடல் ஒன்றை எழுதி இசையமைத்துள்ளார். பக்திப் பாடலை உருவாக்குவதற்கு முன் இளையராஜாவிடம் அறிவுரை கேட்டிருக்கிறார் யத்தீஷ்வர் ராஜா.
தந்தை கார்த்திக் ராஜாவின் உதவியோடு இப்பக்திப் பாடலை எழுதி முடித்திருக்கிறார் யத்தீஷ்வர். தான் முதன்முதலாக உருவாக்கிய பக்திப் பாடலை திருவண்ணாமலை ரமணாசிரமத்தில் வெளியிட வேண்டும் என யத்தீஷ்வர் ராஜா விருப்பப்பட்டுள்ளார். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட ரமணாசிரம நிர்வாகிகளிடம் பேசி அனுமதி பெறப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் தான் எழுதி, இசையமைத்த பக்திப் பாடலை யத்தீஷ்வர் சிங் இன்று வெளியிட்டார். ரமணாசிரம நிர்வாகி பாடலை வெளியிட, கார்த்திக் ராஜா இதைப் பெற்றுக்கொண்டார். பாடல் வெளியீட்டின் கார்த்திக் ராஜா உள்ளிட்டோர் உடனிருந்தார்கள். திரைத் துறையிலும் இசையமைக்க ஆர்வம் கொண்டுள்ள யத்தீஷ்வர் ராஜா, முதல் பாடலைக் கடவுளுக்காகப் படைக்க வேண்டும் என்று நினைத்ததாகத் தெரிகிறது.
யத்தீஷ்வர் எழுதி, இசையமைத்து வெளியிட்டுள்ள பக்திப் பாடல் அனைவருக்கும் பிடிக்கும் என்றும் யத்தீஷ்வர் ராஜாவுக்கு தமிழ் மக்களின் அன்பு கிடைக்கும் என கார்த்திக் ராஜா நம்புகிறார். இளையராஜா குடும்பத்திலிருந்து கார்த்திக் ராஜா, யுவன்ஷங்கர் ராஜா ஆகியோர் இசையமைப்பாளர்களாக திரைத் துறையில் இருந்து வருகிறார்கள். மறைந்த பவதாரிணி பிரபல பாடகியாக வலம் வந்துள்ளார். இவர்களுடைய வரிசையில் இளையராஜாவின் குடும்பத்திலிருந்து அடுத்த வாரிசாக யத்தீஷ்வர் ராஜா அறிமுகமாகிறார்.