இளையராஜா காப்புரிமை வழக்குகள் போடுவது ஏன்?: வழக்கறிஞர் சரவணன் விளக்கம் | Ilaiyaraaja |

பதிப்புரிமைச் சட்டம் 57-ன் படி, பாடலின் இசையமைப்பாளரின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில்....
இளையராஜா (கோப்புப்படம்)
இளையராஜா (கோப்புப்படம்)@ilaiyaraaja
1 min read

தயாரிப்பு நிறுவனங்களின் மீது இளையராஜா காப்புரிமை மீறல் வழக்கு தொடர்வது ஏன் என்று அவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சரவணன் விளக்கமளித்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-

“டியூட் படத்தில் உள்ள பயன்படுத்தப்பட்டுள்ள தனது இரண்டு பாடல்களையும் படத்திலிருந்து நீக்க வேண்டும் என்ற இளையராஜாவின் சட்டப் போராட்டம் வெற்றியடைந்திருக்கிறது. இளையராஜா பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதால் இந்த வழக்கு தொடரப்பட்டது. அது விசாரணைக்கு வந்தபோது, பாடல்களின் உரிமை இசையமைப்பாளரான இளையராஜாவுக்கே உரியது என்றும், வேறு யாரும் அதை எடுத்துச் செல்ல உரிமை இல்லை என்றும் நாங்கள் வாதிட்டோம்.

எதிர்தரப்பினர், தயாரிப்பாளர்களுக்கு அனைத்து உரிமைகளும் உள்ளன. பாடல்களை விற்க அவர்களுக்கு உரிமை உண்டு என்று வாதிட்டனர். ஆனால், பாடல்களைத் தனியாக எடுத்து விற்பதற்கோ, மற்றவர்கள் பயன்படுத்துவதற்கோ, அனுமதிப்பதற்கோ வாய்ப்பில்லை என்று நாங்கள் வாதிட்டோம். இதில் முக்கியமாக, நீதிபதி என்.செந்தில்குமார், இந்தப் பாடல்களை உருமாற்றுவதாகவும், சிதைப்பதாகவும், மாற்றியமைப்பதாகவும் கூறி தடை விதித்துள்ளார். பதிப்புரிமைச் சட்டம் 57-ன் படி, பாடலின் இசையமைப்பாளரின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பாடலை மாற்றவோ, திருத்தவோ கூடாது. இதை ஏற்றுக் கொண்டு, இப்போது இந்தப் பாடல்களைப் பயன்படுத்தத் தடை விதித்துள்ளனர்.

இளையராஜாவின் படங்கள், பெயர் மற்றும் பட்டங்களைப் பயன்படுத்த தடை என்பது அனைவருக்குமானது அல்ல. அவற்றை வணிக ரீதியாகப் பயன்படுத்தக் கூடாது என்பதற்காகவே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுவும் இளையராஜாவுக்கு மட்டும்தான் முதன்முறை இப்படி ஒரு தீர்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்று கிடையாது. ஏற்கெனவே அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் உள்ளிட்டோர் தங்களது பெயர், படங்களை அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவு பெற்றுள்ளார்கள்.

இளையராஜாவுக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு நிலைமை என்றால், அவர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளுக்கு குறிப்பிட்ட காலக்கோடு உண்டு. அதாவது, இணையதளத்தில் சமூக ஊடகங்கள் வருவதற்கு முன்பு கேசட் போடுவதற்காக இளையராஜா வழங்கிய உரிமைகளை வைத்துக்கொண்டு, சமூக ஊடகங்களான ஸ்பாடிஃபை, யூடியூப் போன்ற தளங்களில் பாடல்களை வெளியிடுகிறார்கள். இதற்கான உரிமைகளை இளையராஜா விட்டுக்கொடுக்கவில்லை என்பதால்தான் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதுதான் இந்த வழக்குகளில் நடந்து வரும் முக்கியமான விஷயமாகும்” என்றார்.

Summary

Lawyer Saravanan, who appeared on behalf of Ilayaraja, has explained why he is pursuing a copyright infringement case against the production companies.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in