டியூட் படத்துக்குச் சிக்கல்! | Ilaiyaraaja |

சோனி நிறுவனம் தாக்கல் செய்த வருமான விவரங்களைத் திருப்பி ஒப்படைத்தார் நீதிபதி...
இளையராஜா
கோப்புப்படம்https://x.com/ilaiyaraaja
1 min read

டியூட் படத்தில் தன் பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியுள்ளார்கள் என்று இளையராஜா தரப்பு தெரிவித்த நிலையில் இதுகுறித்து தனி வழக்கு தொடர உயர் நீதிமன்ற நீதிபதி அறிவுறுத்தினார்.

காப்புரிமைச் சட்டத்திற்கு எதிராகப் பல்வேறு ஊடகங்கள், இணையதளங்கள், இசை நிறுவனங்கள் தனது பாடல்களை அனுமதியின்றிப் பயன்படுத்தி வருவதாக இளையராஜா தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

குறிப்பாக, சோனி மியூசிக் என்டர்டைன்மென்ட் நிறுவனம், தன் அனுமதியின்றி பாடல்களை மாற்றியும், சிதைத்தும் பயன்படுத்துவதாகப் புகார் கூறிய இளையராஜா, சோனி அந்தப் பாடல்களை எக்கோ ரெகார்ட்ஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து வாங்கியதாகக் கூறுவதாகவும், ஏற்கெனவே தன் பாடல்களைப் பயன்படுத்த உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தபோதும் அதை மதிக்காமல் தொடர்ந்து பயன்படுத்தி வருவதாகவும் அந்த மனுவில் சுட்டிக் காட்டியிருந்தார்.

இந்த வழக்கு கடந்த செப்டம்பர் 26 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இளையராஜாவின் பாடல்களை வணிக ரீதியாக பயன்படுத்தி ஈட்டிய வருமான விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். அதனடிப்படையில் சோனி நிறுவனம் இன்று சீல் செய்யப்பட்ட கவரில் இளையராஜா பாடல்களைக் கொண்டு ஈட்டிய வருமான விவரங்களை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. மேலும், அந்நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உச்ச நீதிமன்றத்தில் சோனி நிறுவனம் தரப்பில் தாக்கல் செய்த மனுவில் இளையராஜா பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார்.

அதன்பின் இளையராஜா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தற்போது வெளியாகியுள்ள டியூட் படத்தில் கூட தனது இரண்டு பாடல்களைப் பயன்படுத்தி உள்ளதாகத் தெரிவித்தார். இதையடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதில் செந்தில் குமார், சீல் செய்யப்பட்ட கவரில் வருமான விவரங்களைத் தாக்கல் செய்ய கூடாது என்ற உச்ச நீதிமன்ற உத்தரவைக் குறிப்பிட்டு, தாக்கல் செய்யப்பட்ட வருமான விவரங்களை திருப்பி ஒப்படைத்தார். மேலும், டியூட் படத்தில் பாடல்கள் பயன்படுத்தப்பட்ட விவகாரம் குறித்து தனி வழக்கு தொடரலாம் என்று அறிவுறுத்தி, வழக்கு விசாரணையை நவம்பர் 19-க்குத் ஒத்திவைத்தார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in