சேலம், திண்டுக்கல், புதுக்கோட்டை, தூத்துக்குடி, வேலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளதாக இளையராஜா அறிவித்துள்ளார்.
இளையராஜா கடந்த 17 அன்று திருநெல்வேலியில் இசை நிகழ்ச்சியை நடத்தினார். திருநெல்வேலி ரெட்டியார்பட்டியில் நடைபெற்ற இந்த இசை நிகழ்ச்சியைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடினார்கள். மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இசை நிகழ்ச்சியை முன்னிட்டு ரெட்டியார்பட்டியில் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இளையராஜாவின் இந்த இசை நிகழ்ச்சிக்கு திருநெல்வேலி மக்களிடமிருந்து மிகுந்த வரவேற்பு கிடைத்தது. ஏற்கெனவே, எல்லா ஊர்களிலும் இசை நிகழ்ச்சி நடத்தப்படும் என அறிவித்ததன் பெயரில் திருநெல்வேலியில் இசை நிகழ்ச்சியை நடத்தினார் இளையராஜா.
திருநெல்வேலியில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து ஒவ்வொரு ஊரிலும் விரைவில் இசை நிகழ்ச்சி நடைபெறும் என இளையராஜா அறிவித்தார். மேலும் எந்த ஊர்? என்று எக்ஸ் தளத்தில் கேள்வியையும் முன்வைத்திருந்தார்.
"நெல்லை மக்களின் அன்பும் ஆதரவும் என்னை மிகவும் உற்சாகப்படுத்தியது!
நான் முன்பு பதிவிட்டது போல் எனது கச்சேரி ஒவ்வொரு ஊர்களிலும் கூடிய விரைவில் நடைபெறும். அடுத்து எந்த ஊர்..?" என்று இளையராஜா ஜனவரி 18 அன்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து, ரசிகர்களுக்கு இன்பஅதிர்ச்சி கொடுக்கும் வகையில், 6 மாவட்டங்களில் இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளதாக இளையராஜா நேற்று அறிவித்தார்.
இதுதொடர்புடைய அவரது எக்ஸ் தளப் பதிவு:
"சேலம், திண்டுக்கல், புதுக்கோட்டை, தூத்துக்குடி, வேலூர், கடலூர்... உங்களை எல்லாம் பார்க்க ஆவலோடு காத்திருக்கிறேன்! தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும்."
இளையராஜாவின் இந்த அறிவிப்பு இசை ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது.