
கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் உள்ள மூகாம்பிகை அம்மன், வீரபத்ர சுவாமிக்கு வைர கிரீடங்கள், தங்க வாள் ஆகியவற்றை இளையராஜா காணிக்கையாக வழங்கியுள்ளார்.
தமிழ் திரை உலகில் தவிர்க்க முடியாத இசை ஆளுமையாக உள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா. 1976-ல் அன்னக்கிளி படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்த இளையராஜா 1500-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து சாதனை படைத்துள்ளார். லண்டனில் சிம்பெனியை இசைத்து உலகப் புகழும் பெற்றவராகத் திகழ்கிறார்.
இளையராஜாவின் இசைப் பங்களிப்பைப் பாராட்டி, மத்திய அரசு அவரை மாநிலங்களவை உறுப்பினராக நியமித்துள்ளது. மேலும், தமிழக அரசு சார்பில் நாளை (செப். 13) அவருக்கு பிரமாண்ட பாராட்டு விழா நடைபெற உள்ளது. சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ள அவ்விழாவுக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். ரஜினிகாந்த், கமல்ஹாசன் எனப் பல முன்னணி நட்சத்திரங்கள் விழாவில் கலந்துகொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் இளையராஜா தனது குடும்பத்தினருடன் நேற்று (செப். 11) சுவாமி தரிசனம் செய்தார். அப்போது தமது திரையுலகப் பயணம் 50 ஆண்டு காலத்தை எட்டியதை ஒட்டி மூகாம்பிகை அம்மனுக்கும் வீரபத்ர சுவாமிக்கும் வைர கிரீடங்கள், வைர மாலைகள் மற்றும் தங்க வாள் ஆகியவற்றை இளையராஜா காணிக்கையாக அளித்தார். இவற்றின் மதிப்பு ரூ. 8 கோடி என்று கூறப்படுகிறது. அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த இளையராஜா, மூகாம்பிகை அம்மனால் தன் வாழ்வில் அசாதாரண முன்னேற்றங்கள் ஏற்பட்டதாகக் குறிப்பிட்டார்.
Ilaiyaraja | Mookambiga Temple | Kollur |