ரவி மோகன் எனப் பெயர் மாற்றம்: ஜெயம் ரவி அறிக்கை

ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளதாகவும், ரசிகர் மன்றத்தை ரவி மோகன் ரசிகர்கள் அறக்கட்டளை என்று மாற்றியுள்ளதாகவும் ரவி அறிவித்துள்ளார்.
ரவி மோகன் எனப் பெயர் மாற்றம்: ஜெயம் ரவி அறிக்கை
ANI
1 min read

தான் இனி ரவி அல்லது ரவி மோகன் என்று அழைக்கப்பட விரும்புவதாக ஜெயம் ரவி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"அசாத்திய நம்பிக்கை, அளவற்ற கனவுகளோடு புத்தாண்டில் நாம் கால் பதிக்கும் இந்தத் தருணத்தில், உங்களிடம் என் வாழ்க்கையின் புதிய பயணத்தைக் குறிக்கும் மாற்றத்தை உங்களிடம் பகிர்ந்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

என் வாழ்க்கையில் சினிமா மீதான என் பற்று கடந்த காலங்களிலும், தற்போதும் எவ்வித மாற்றமின்றி அப்படியே இருக்கிறது. இதுவே நான் இன்று இந்த நிலையில் இருக்கவும் அடித்தளமாக அமைந்துள்ளது. சினிமா பயணத்தைத் திரும்பிப் பார்க்கும் இந்த நேரத்தில் தாங்களும், சினிமாவும் எனக்கு வழங்கிய வாய்ப்புகள், அன்பு, ஆதரவு அனைத்துக்கும் கடமைப்பட்டுள்ளேன். எனக்கு வாழ்க்கை, அன்பு மற்றும் எல்லாவற்றையும் வழங்கிய துறைக்கு என் ஆதரவை எப்போதும் கொடுப்பேன்.

இந்த நாள் தொடங்கி, நான் ரவி/ரவி மோகன் என்று அழைக்கப்பட விரும்புகிறேன். இந்தப் பெயர் என் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் திரைத்துறை கனவுகளை முன்னோக்கி எடுத்துச் செல்லும், என் கனவு மற்றும் மதிப்புகளுடன் புதிய பயணத்தைத் தொடங்கும் என்னை இந்தப் பெயரிலேயே அனைவரும் அழைக்குமாரும், ஜெயம் ரவி என்ற பெயரில் இனி வரும் காலங்களில் அழைக்க வேண்டாம் என்றும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

திரைத் துறை மீது நான் கொண்டுள்ள அளவற்ற அன்பின் பாத்திரமாக, ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் துவங்கியுள்ளேன் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்நிறுவனம் உலகளவில் ரசிகர்கள் கொண்டாடும் சினிமாவைத் திரைக்குக் கொண்டு சேர்க்கும் நோக்கம் கொண்டு துவங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் திறமையாளர்களுக்கும், நல்ல கதைகளுக்கும் முக்கியத்துவம் அளிப்பதோடு, அர்த்தமுள்ள கதைகளைத் திரைக்குக் கொண்டு வர உதவும்.

என் அன்பான ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி, சிறப்பான சமுதாயத்தை உருவாக்க ரசிகர்கள் எனக்கு பலமாகவும், ஊக்கமளித்தும் வருகிறார்கள். எனக்கு ஆதரவளித்த சமூகத்திற்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்ய, என் ரசிகர் மன்றத்தைப் பிறருக்கு உதவும் வகையில், ரவி மோகன் ரசிகர்கள் அறக்கட்டளையாக மாற்றப்படுகிறது. இது, நான் பெற்ற அன்பையும் ஆதரவையும் மிகவும் தேவைப்படுபவர்களுக்கு அர்த்தமுள்ள பங்களிப்பாக மாற்றும் எனது இதயப்பூர்வமான முயற்சி.

தமிழ் மக்கள் ஆசியுடன், என் ரசிகர்கள், ஊடகத்தினர் மற்றும் அனைவரையும் மேலே குறிப்பிட்டுள்ளதை போன்றே என்னை அழைக்குமாறும், புதிய துவக்கத்துக்குத் தங்களது ஆதரவை வழங்குமாறும் பனிவோடு கேட்டுக்கொள்கிறேன். உங்களது ஊக்கம் தான், எனக்கு எப்போதும் சிறப்பான உந்துதலாக இருந்து வந்துள்ளது. புதிய பயணத்திலும், உங்களின் தொடர்ச்சியான ஆதரவு எனக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். நேர்மறை மற்றும் முன்னேற்றம் நிரம்பிய ஆண்டாக இதனை மாற்றுவோம்" என்று ரவி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in