
இசையமைப்பாளர் இளையராஜா தான் எழுதிய சிம்பொனியைப் பதிவு செய்துள்ளதாகவும் அடுத்தாண்டு ஜனவரியில் இதை வெளியிடுவதாகவும் அறிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இசையமைப்பாளர் இளையராஜா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். வாழ்த்துச் செய்தியுடன் சிம்பொனி குறித்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்த ஃபேஸ்புக் பதிவில் இளையராஜா பதிவிட்டுள்ளதாவது:
"அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்... நான் எனது சிம்பொனியை பிரிட்டனில் பதிவு செய்துள்ளேன் என்பதை உலகம் முழுக்க இருக்கும் இசைப் பிரியர்களுக்கு இந்த நன்னாளில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். ஜனவரி 26, 2025 அன்று இது வெளியாகிறது" என்று இளையராஜா குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, கடந்த மே 16 அன்று ரசிகர்களுக்கு இன்பச் செய்தி காத்திருப்பதாக அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா, 35 நாள்களில் ஒரு சிம்பொனியை எழுதி முடித்துவிட்டதாகக் கூறி காணொளி ஒன்றை வெளியிட்டார்.