
பிரபல நடிகையும் பாடகியுமான ஜெனிஃபர் லோபஸ் நான்கு முறை விவாகரத்து ஆன நிலையில், இனி திருமணத்துக்கு வாய்ப்பில்லை என்ற அர்த்தத்தில் ரசிகரிடம் பதிலளித்திருப்பது கவனம் பெற்றுள்ளது.
ஜெனிஃபர் லோபஸ் தற்போது அப் ஆல் நைட் டூர் (Up All Night Tour) நிகழ்ச்சியை அரங்கேற்றி வருகிறார். ஐரோப்பாவில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியின்போது, ரசிகர் ஒருவர் கேட்ட கேள்வியும் அதற்கு ஜெனிஃபர் லோபஸ் அளித்த பதிலும் தான் சுவாரஸ்ய பேசுபொருளாக மாறியுள்ளது.
ஸ்பெயின் நிகழ்ச்சியில் ரசிகர் ஒருவர், தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு எழுதி கேட்டிருக்கிறார். இதற்கு ரசிகர்கள் முன்னிலையிலேயே ஜெனிஃபர் லோபஸும் சிரித்தபடி பதிலளித்தார். திருமணத்தின் மீதான நம்பிக்கையை ஜெனிஃபர் லோபஸ் இழந்ததை அவருடைய பதில் உணர்த்தியது.
"திருமணத்துக்கு சிலமுறை முயன்றுள்ளேன். இனி வாய்ப்பில்லை என நினைக்கிறேன்" என்றார். ஜெனிஃபர் லோபஸ் பதிலளித்த காணொளி எக்ஸ் தளப் பக்கத்தில் பகிரப்பட்டு வருகிறது.
ஜெனிஃபர் லோபஸ் நான்கு முறை திருமணம் செய்துகொண்டுள்ளார். நான்கு திருமணமும் விவாகரத்தில் முடிந்துள்ளது. இதைக் குறிப்பிட்டே ஜெனிஃபர் லோபஸ் அவ்வாறு பதிலளித்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
ஜெனிஃபர் லோபஸ் முதலில் 1997-ல் ஓஜானி நோவா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். 1998-ல் இருவரும் பிரிந்தார்கள்.
2001-ல் கிறிஸ் ஜுட் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இருவரும் 2003-ல் பிரிந்தார்கள்.
சக பாடகர் மார்க் அந்தோணியை 2004-ல் திருமணம் செய்துகொண்டார் ஜெனிஃபர் லோபஸ். இந்தத் திருமண வாழ்க்கை 2014 வரை நீடித்தது. இவர்களுக்கு 17 வயதில் எம்மி மற்றும் மேக்ஸ் என இரட்டையர்கள் உள்ளார்கள்.
இதைத் தொடர்ந்து, 2017-ல் அலெக்ஸ் ரோட்ரிகெஸுடன் பழகத் தொடங்கினார். 2019-ல் இருவருக்கும் திருமண நிச்சயம் நடைபெற்றது. ஆனால், இவர்கள் 2021-ல் பிரிந்தார்கள்.
பென் அஃப்லெக் என்பவரை 2022-ல் திருமணம் செய்துகொண்டுள்ளார். இரு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தத் திருமணம் கடந்த ஜனவரியில் விவாகரத்தில் முடிந்தது.
Up All Night Tour | Jennifer Lopez