பாலியல் புகார்கள் தொடர்பாக கேரள அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளதாக புகாரளித்த நடிகை ஒருவர் தெரிவித்துள்ளார்.
மலையாள நடிகைகளுக்கு பாலியல் ரீதியான நெருக்கடிகள் உள்ளதாக நீதிபதி ஹேமா ஆணையம் பரபரப்பு அறிக்கை வெளியிட்டது.
இதைத் தொடர்ந்து மலையாள கலைஞர்கள் மீது அடுத்தடுத்து வைக்கப்படும் பாலியல் குற்றச்சாட்டுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
முன்னதாக, மலையாள திரைப்பட நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராக இருந்த சித்திக் மீது பாலியல் வன்கொடுமை புகார் எழுந்த நிலையில், சங்கத்தின் பொதுச்செயலாளர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.
சித்திக் மீது பாலியல் புகார் தெரிவித்த நடிகை ரேவதி சம்பத், கடந்த 2016-ல் மஸ்கட் விடுதியில் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் குறிப்பிட்டு, சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் புகார் அளித்தார்.
இதன் பிறகு திருவனந்தபுரம் காவல் துறையினர் சித்திக் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதைத் தொடர்ந்து பெண் நடிகை ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் பிரபல நடிகரும், எம்எல்ஏவுமான நடிகர் முகேஷ் மீதும், நடிகர் ஜெயசூர்யா மீதும் ஜாமீனில் வெளியே வரமுடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் பாலியல் புகாரளித்த நடிகை ஒருவர் புதிய தலைமுறைக்கு பேட்டியளித்துள்ளார்.
அதில் அவர் பேசியதாவது:
“பாலியல் தொல்லை குறித்த அனைத்து புகார்களையும் சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் ஆதாரத்துடன் கொடுத்தேன். முகேஷ், ஜெயசூர்யா உட்பட 7 பேர் மீது புகார் அளித்துள்ளேன். பாலியல் புகார்கள் தொடர்பாக கேரள அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.
பெண்கள் தைரியமாக வந்து தங்களின் பிரச்னைகள் குறித்து பேச வேண்டும். எனக்கு நீதி வேண்டும். நீதி கொடுக்க வேண்டியது நீதிமன்றத்தின் கடமை. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நான் ஒரு தாய் போன்றவர். அவர்களுக்காக நான் போராடுவேன்.
மலையாள நடிகர் சங்கத்தில் மூத்த நடிகர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. அது மாஃபியா போல் செயல்பட்டது. மலையாள நடிகர் சங்கத்தின் உறுப்பினர் ஆவதற்கு குறைந்தது 3 படங்களில் நடித்திருக்க வேண்டும். ஆனால், நான் 6 படம் நடித்த பிறகு போய் கேட்டதற்கு எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தனர். தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நல்ல மரியாதை கிடைக்கிறது” என்றார்.