பாலியல் புகார் எதிரொலியாக நடிகர்கள் முகேஷ் மற்றும் ஜெயசூர்யா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன.
மலையாள நடிகைகளுக்கு பாலியல் ரீதியான நெருக்கடிகள் உள்ளதாக நீதிபதி ஹேமா ஆணையம் பரபரப்பு அறிக்கை வெளியிட்டது.
இதைத் தொடர்ந்து மலையாள கலைஞர்கள் மீது அடுத்தடுத்து வைக்கப்படும் பாலியல் குற்றச்சாட்டுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
முன்னதாக, மலையாள திரைப்பட நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராக இருந்த சித்திக் மீது பாலியல் வன்கொடுமை புகார் எழுந்த நிலையில், சங்கத்தின் பொதுச்செயலாளர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.
சித்திக் மீது பாலியல் புகார் தெரிவித்த நடிகை ரேவதி சம்பத், கடந்த 2016-ல் மஸ்கட் விடுதியில் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் குறிப்பிட்டு, சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் புகார் அளித்தார்.
இதன் பிறகு திருவனந்தபுரம் காவல் துறையினர் சித்திக் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட நடிகை ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் பிரபல நடிகரும், எம்எல்ஏவுமான நடிகர் முகேஷ் மீதும், நடிகர் ஜெயசூர்யா மீதும் ஜாமீனில் வெளியே வரமுடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன.
முன்னதாக, முகேஷ் எம்எல்ஏ பதவியில் இருந்து விலக வேண்டும் என்று முகேஷின் வீட்டை நோக்கி காங்கிரஸ் தொண்டர்கள் பேரணி சென்றனர்.