
குட் பேட் அக்லி படத்தில் இளையராஜா பாடல்களைப் பயன்படுத்த இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடித்த குட் பேட் அகில் படம், கடந்த ஏப்ரல் 10- ல் வெளியானது. இதில், திரிஷா, அர்ஜுன் தாஸ், சுனில், பிரசன்னா, பிரியா வாரியர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், குட் பேட் அக்லி படத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவின் மூன்று பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருந்தது சர்ச்சை ஆனது. ’என் ஜோடி மஞ்ச குருவி’, ‘இளமை இதோ இதோ’, ‘ஒத்த ரூபா தாரேன்’ ஆகிய பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருந்த நிலையில், தன்னுடைய அனுமதி இன்றி இந்த மூன்று பாடல்களைப் பயன்படுத்தியதைக் கண்டித்து இசையமைப்பாளர் இளையராஜா தயாரிப்பு நிறுவனத்திற்கு நோட்டீஸ் ஒன்றை கடந்த ஏப்ரலில் அனுப்பினார். அதில், தன்னுடைய அனுமதியின்றி பாடல்களைப் பயன்படுத்தி உள்ளதால், ரூ. 5 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அதற்கு பதலளித்த தயாரிப்பு நிறுவனம், சட்டப்பூர்வ உரிமையாளரிடம் இருந்து பாடல்களைப் பயன்படுத்த அனுமதி பெற்றுவிட்டோம் என்று தெரிவித்தது.
இதையடுத்து, குட் பேட் அக்லி படத்தில் தனது அனுமதியின்றி தனது 3 பாடல்களைப் பயன்படுத்தியது பதிப்புரிமை சட்டத்திற்கு விரோதமானது என்று இளையராஜா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று (செப். 8) விசாரணைக்கு வந்த நிலையில், படத்தில் அவரது பாடல்களைப் பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், மனு குறித்து தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு வழக்கு விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
Good Bad Ugly | Ilaiyaraja | Ajith Kumar | Adhik Ravichandran | HC | Interim Stay |