கோயிலை விடப் படிப்பு தானே முக்கியம்: ஜிபி முத்துவின் அக்கறைப் பதிவு | GP Muthu |

நான் இதைச் சொன்னால் கோயிலுக்கு எதிராகப் பேசுகிறேன் என்று சொல்வார்கள். எனக்கும் கடவுள் நம்பிக்கை உண்டு...
சமூக அக்கறை காணொளி வெளியிட்ட ஜிபி முத்து
சமூக அக்கறை காணொளி வெளியிட்ட ஜிபி முத்து
1 min read

கோயிலில் சத்தமாக பாடல்கள் ஒலிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டி மாணவர்களின் கோயிலை விடப் படிப்பு தானே முக்கியம் என்று டிக்டாக் பிரபலம் ஜிபி முத்து வெளியிட்டுள்ள காணொளி கவனம் பெற்றுள்ளது.

சமூக ஊடகம் மூலம் பிரபலம் அடைந்தவர் ஜிபி முத்து. குறிப்பாக டிக்டாக் செயலி பிரபலமாக இருந்தபோது தினந்தோறும் காணொளி வெளியிட்டு வந்த இவர், அதன் தடைக்குப் பிறகு மற்ற ஊடகங்களில் காணொளிகள் பதிவிடத் தொடங்கினார். பின்னர் கொரோனா காலத்தில் மிகவும் பிரபலமடைந்த அவர், அதன்பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். தற்போது சில படங்களில் நடித்து வரும் ஜிபி முத்து, தனது சமூக ஊடகப் பக்கத்தில் நகைச்சுவையான காணொளிகளையும் வெளியிட்டு வருகிறார்.

ஜிபி முத்துவின் சமூக அக்கறை

தூத்துக்குடி மாவட்டம் பெருமாள்புரம் பகுதியைச் சேர்ந்த இவர் சமீபத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தன் வீட்டுக்கு அருகில் ஒரு பள்ளி இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ள ஜிபி முத்து, அதற்கு அருகில் இருக்கும் கோயிலில் சத்தமாக பாடல்கள் இசைக்கப்படுவதால் மாணவர்களின் படிப்புக்கு இடைஞ்சல் ஏற்படுகிறது என்று சமூக அக்கறையுள்ள பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். பொதுவாக தனக்கு வரும் கடிதங்களைப் படித்துக் காட்டி, வெள்ளந்தியாக விமர்சனம் செய்து காணொளி வெளியிடும் ஜிபி முத்துவின் இந்தப் பதிவு கவனம் பெற்றுள்ளது.

எது முக்கியம்?

தனது காணொளியில் ஜிபி முத்து கூறியுள்ளதாவது:-

“நண்பர்களே ஒரு சின்ன விஷயம். இதைச் சொன்னால் எல்லாரும் என்னை இழிவாகப் பேசுவார்கள். ஆனால் அவர்கள் என்ன பேசினாலும் கவலையில்லை. இங்கே அருகில் பள்ளி ஒன்று இருக்கிறது. அதற்கு பக்கத்திலேயே கோயில் இருக்கிறது. இந்தக் கோயிலில் காலை 7 மணிக்கு தொடங்கும் பாடல், நாள் முழுவதும் சத்தமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. மாலை 7 மணி வரை பாடல்கள் சத்தமாக ஒலித்துக் கொண்டிருந்தால் பிள்ளைகள் எப்படிப் படிக்க முடியும்? இது அவர்களுக்கு தேர்வு நடக்கும் நேரம். பாடலின் சத்தத்தைக் குறைத்தாவது வைக்கலாம். ஊருக்கு ஊர் இப்படித்தான் சிலர் இருக்கிறார்கள். நான் இதைச் சொன்னால் கோயிலுக்கு எதிராகப் பேசுகிறேன் என்று சொல்வார்கள். எனக்கும் கடவுள் நம்பிக்கை உண்டு. என்னைப்போல் சாமி கும்பிட யாராலும் முடியாது. எந்த சாமியும் இடைஞ்சலை ஏற்படுத்தி வழிபாடு செய்யச் சொல்லவில்லை. ஆனால் சிலர் கடவுளின் பெயரில் கொள்ளை அடித்து உண்பதும், மற்றவர்களுக்கு இடைஞ்சல் கொடுப்பதும் செய்கிறார்கள். இதை எதிர்த்துச் சொன்னால் என்னைக் கேவலமாகப் பேசுவார்கள்” என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Summary

A video posted by TikTok celebrity GP Muthu, pointing out that songs are being played loudly in temples, has garnered attention, saying that students' studies are more important than temples.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in