டிஜிட்டல் தளங்களுக்குக் கட்டுப்பாடா?: மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் தகவல்

"கருத்து சுதந்திரம் தவறாகப் பயன்படுத்துகிறதா என்கிற கவலை சமூகத்தில் நிலவுகிறது."
டிஜிட்டல் தளங்களுக்குக் கட்டுப்பாடா?: மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் தகவல்
1 min read

டிஜிட்டல் தளங்களில் வெளியாகும் காணொளிகள், படங்கள், இணையத் தொடர்கள் உள்ளிட்டவற்றுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கும் வகையில் புதிய விதிகள் நடைமுறைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமய் ரைனா யூடியூப் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பிரபல யூடியூபர் ரன்வீர் அல்லாபாடியா, சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்து சமூக ஊடகங்களில் அதிகம் பரவியது. நாடு முழுக்க பெரும் பேசுபொருளானதையடுத்து, ரன்வீர் அல்லாபாடியாவுக்குக் கண்டனங்கள் வலுத்தன. உச்ச நீதிமன்றம், கைது நடவடிக்கையிலிருந்து பாதுகாப்பு வழங்கினாலும், ரன்வீர் அல்லாபாடியாவைக் கடுமையாக சாடியது.

இந்த விவகாரம் பெரும் பூதாகரமானதைத் தொடர்ந்து, "புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் ஊடகத் தளங்களின் வளர்ச்சியைத் தொடர்ந்து, சர்ச்சைக்குரிய அம்சங்களை நீக்குவதற்காக ஏற்கெனவே உள்ள சட்டங்களில் திருத்தம் தேவைப்படுகிறதா" என தகவல் ஒளிபரப்புத் துறையின் நாடாளுமன்ற நிலைக் குழு கடந்த பிப்ரவரி 13-ல் தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்திடம் கேள்வியெழுப்பியது.

இதற்கு தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் சார்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது. அருவருப்பான மற்றும் வன்முறை காட்சிகளை டிஜிட்டல் தளங்களில் காட்டுவதற்காக அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் கருத்து சுதந்திரம் தவறாகப் பயன்படுத்துகிறதா என்கிற கவலை சமூகத்தில் நிலவுகிறது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

"அண்மையில் நிகழ்ந்து வருவதை அமைச்சகம் கவனத்தில் கொண்டுள்ளது. ஏற்கெனவே இருக்கும் சட்ட விதிகள் மற்றும் புதிய சட்ட வரையறையை உருவாக்குவதற்கானத் தேவை குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிப்ரவரி 25-ல் அடுத்த கூட்டம் நடைபெறவுள்ளது என்றும் இந்தக் கூட்டத்துக்குப் பிறகு, விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சகம் சார்பில் நாடாளுமன்ற நிலைக் குழுவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in