குட் பேட் அக்லி: தயாரிப்பு நிறுவனத்துக்கு இளையராஜா நோட்டீஸ்

அனுமதியின்றி பாடல்களைப் பயன்படுத்தியதற்காக ரூ. 5 கோடி நஷ்ட ஈடு தரவேண்டும்.
கோப்புப்படம்
கோப்புப்படம்படம்: https://x.com/ilaiyaraaja
1 min read

குட் பேட் அக்லி படத்தில் அனுமதியின்றி பாடல்களைப் பயன்படுத்தியதற்காக ரூ. 5 கோடி நஷ்ட ஈடு கோரி படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு இளையராஜா தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அண்மையில் வெளியான படம் குட் பேட் அக்லி. பல பழைய நினைவுகளைத் திரையில் கொண்டு வந்ததே படத்தின் பிரதான நோக்கமாக இருந்தது. அஜித் நடித்த படங்கள், அஜித் பேசிய வசனங்கள், அஜித் படங்களில் இடம்பெற்ற இசை என அனைத்தும் குட் பேட் அக்லியில் இடம்பெற்றிருந்தன. இதுமட்டுமின்றி சண்டைக் காட்சி ஒன்றில், 1983-ல் வெளியான சகலகலா வல்லவன் படத்தில் இடம்பெற்றுள்ள இளமை இதோ இதோ பாடல் பயன்படுத்தப்பட்டிருந்தது. மேலும், 1996-ல் வெளியான நாட்டுப்புற பாட்டு படத்தில் இடம்பெற்ற ஒத்த ரூபாயும் தாரேன் பாடல் மற்றும் 1986-ல் வெளியான விக்ரம் படத்தின் என் ஜோடி மஞ்சக் குருவி பாடல் ஆகியவையும் குட் பேட் அக்லியில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், அனுமதியின்றி தன் பாடல்களைப் பயன்படுத்தியதாக குட் பேட் அக்லி படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸுக்கு இளையராஜா சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

நோட்டீஸில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்

  • அனுமதியின்றி பாடல்களைப் பயன்படுத்தியதற்காக ரூ. 5 கோடி நஷ்ட ஈடு தரவேண்டும்

  • குட் பேட் அக்லியில் பயன்படுத்தப்பட்டுள்ள பாடல்கள் நீக்கப்பட வேண்டும்.

  • அனுமதியின்றி பாடல்களைப் பயன்படுத்தியதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர்கள் நவீன் மற்றும் ஒய் ரவி ஷங்கர் ஆகியோருக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. படத்தில் பாடல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதால், படத்தின் மூலம் ஈட்டப்பட்ட வருவாய் குறித்த விவரங்களும் இளையராஜா அனுப்பிய நோட்டீஸில் கோரப்பட்டுள்ளது.

இளையராஜா இதுபோல தன் பாடல்களைப் பயன்படுத்தியதற்கு நோட்டீஸ் அனுப்புவது இது முதன்முறையல்ல. 1983-ல் வெளியான தங்கமகன் படத்தில் இடம்பெற்ற டிஸ்கோ பாடலைப் பயன்படுத்தியதற்காக கூலி படத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸுக்கு இளையராஜா சார்பில் சட்டரீதியிலான நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மலையாளப் படமான மஞ்சும்மெல் பாய்ஸ் படத்தின் இறுதியில் பயன்படுத்தப்பட்டிருந்த குணா படப் பாடலுக்காக, இப்படத்தின் தயாரிப்பாளருக்கும் இளையராஜா சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in