
'All we imagine as light' திரைப்படத்துக்காக கோல்டன் குளோப் விருதுகளில் சிறந்த இயக்குநருக்கான பிரிவில் பாயல் கபாடியா பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.
இந்தப் படம் சிறந்த பிறமொழிப் படத்துக்கான பிரிவிலும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
கனி கஸ்ருதி, திவ்ய பிரபா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் 'All we imagine as light'. மூன்று பணிப் பெண்களின் மூலம் மும்பையின் நிதர்சனங்களைக் கண்டறிவது தான் இந்தப் படத்தின் கதை. இந்தப் படம் விமர்சன ரீதியாகப் பல்வேறு வரவேற்புகளைப் பெற்றது.
கடந்த மே மாதம் கான்ஸ் திரைப்பட விழாவில் இந்தப் படத்துக்காக கிராண்ட் பிரிக்ஸ் விருதை வென்றார் பாயல் கபாடியா. ஆஸ்கருக்குப் பரிந்துரைப்பதில் மிக முக்கியமானப் போட்டியாக இந்தப் படம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இறுதியில், இந்தியா சார்பில் லாபடா லேடிஸ் படமே ஆஸ்கருக்குப் பரிந்துரை செய்யப்பட்டது.
இந்த நிலையில், 82-வது கோல்டன் குளோப் விருதுகளுக்கான பரிந்துரைகள் டிசம்பர் 9 அன்று அறிவிக்கப்பட்டது. இதில் சிறந்த பிறமொழிப் படத்துக்காகப் பரிந்துரை செய்யப்பட்ட 6 படங்களில் 'All we imagine as light' படமும் இடம்பெற்றுள்ளது. சிறந்த இயக்குநருக்கான பிரிவில் பரிந்துரை செய்யப்பட்ட 6 பேரில் பாயல் கபாடியாவும் ஒருவர்.
கோல்டன் குளோப் விருதுகளில் சிறந்த இயக்குநருக்கான பிரிவில் இந்தியாவிலிருந்து ஓர் இயக்குநரின் பெயர் பரிந்துரை செய்யப்படுவது இதுவே முதன்முறை.