கோட் படம் வெளியாக இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் ஒரு சில திரையரங்குகளில் முதல் நாளுக்கான முன்பதிவு தொடங்காததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கியுள்ள தி கோட் (தி கிரேடஸ்ட் ஆஃப் ஆல் டைம்) படம் வரும் செப்டம்பர் 5-ல் வெளியாக உள்ளது.
இப்படத்தில் பிரசாந்த், மீனாட்சி சவுத்ரி, மோகன், பிரபுதேவா, ஜெயராம், விடிவி கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், சினேகா, லைலா போன்ற பலரும் நடித்துள்ளனர். இசை - யுவன் சங்கர் ராஜா, தயாரிப்பு - ஏஜிஎஸ் நிறுவனம். இப்படத்தின் டிரைலர் கடந்த ஆகஸ்ட் 17 அன்று வெளியானது.
இந்நிலையில் இப்படத்துக்கான டிக்கெட் முன்பதிவு சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. முதல் நாளில் மட்டும் 20,000 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டதாகவும், இந்த வருடத்தில் அதிகமாக முன்பதிவு செய்யப்பட்ட படமாகவும் கோட் அமைந்துள்ளதாக ரோஹிணி திரையரங்கின் உரிமையாளர் தெரிவித்தார்.
இது ஒரு பக்கம் இருக்க இன்னும் ஒரு சில திரையரங்குகளில் முதல் நாளுக்கான முன்பதிவு தொடங்காததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். காசி டாக்கீஸ் உட்பட ஒரு சில திரையரங்குகளில் நேரடியாக 2-ம் நாளுக்கான முன்பதிவு மட்டுமே தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
இன்னும் ஒரு சில திரையரங்குகளில் எந்த நாட்களுக்கான முன்பதிவும் தொடங்கவில்லை. அதேபோல் ஒரு சில திரையரங்குகளில் முன்பதிவு செய்ய முயற்சி செய்யும் போது தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.