கோட் படம் ஒரு கமர்ஷியல் படமாக இருக்கும் என்று இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கி வரும் தி கோட் (தி கிரேடஸ்ட் ஆஃப் ஆல் டைம்) படம் வரும் செப்டம்பர் 5-ல் வெளியாக உள்ளது.
இப்படத்தில் பிரசாந்த், மீனாட்சி சவுத்ரி, மோகன், பிரபுதேவா, ஜெயராம், விடிவி கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், சினேகா, லைலா போன்ற பலரும் நடித்துள்ளனர். இசை - யுவன் சங்கர் ராஜா, தயாரிப்பு - ஏஜிஎஸ் நிறுவனம்.
இப்படத்தின் டிரைலர் கடந்த ஆகஸ்ட் 17 அன்று வெளியானது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த வெங்கட் பிரபுவிடம், கோட் அரசியல் படமா? இதில் அரசியல் வசனங்கள் இடம்பெற வேண்டும் என்று விஜய் சொன்னாரா? போன்ற கேள்விகள் கேட்கப்பட்டன.
இதற்கு பதிலளித்த வெங்கட் பிரபு, “இது வேண்டும், அது வேண்டும் என எதிலும் தலையிட மாட்டார் விஜய். அவர் அப்படிப்பட்டவர் கிடையாது. எந்த இயக்குநரிடம் அவர் அப்படி நடந்துக்கொள்ள மாட்டார். கோட் அரசியல் படம் கிடையாது, இது ஒரு கமர்ஷியல் படம். டிரைலரைப் பார்க்கும்போது ஒரு சில வசனங்கள் அரசியல் நோக்கத்துடன் எழுதப்பட்டதா? என்ற சந்தேகம் வரலாம், ஆனால் அவை அனைத்தும் கதைக்குத் தேவைப்படும் வசனங்களே” என்றார்.