
இளையராஜா பாடல்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக குட் பேட் அக்லி பட தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடித்த குட் பேட் அகில் படம், கடந்த ஏப்ரல் 10- ல் வெளியானது. இதில், திரிஷா, அர்ஜுன் தாஸ், சுனில், பிரசன்னா, பிரியா வாரியர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இதற்கிடையில், குட் பேட் அக்லி படத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவின் மூன்று பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருந்தது சர்ச்சை ஆனது. ’என் ஜோடி மஞ்ச குருவி’, ‘இளமை இதோ இதோ’, ‘ஒத்த ரூபா தாரேன்’ ஆகிய பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருந்த நிலையில், தன்னுடைய அனுமதி இன்றி இந்த மூன்று பாடல்களைப் பயன்படுத்தியதைக் கண்டித்து இசையமைப்பாளர் இளையராஜா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் படத்தில் அவரது பாடல்களைப் பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில், இந்தத் தடையை நீக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, குட் பேட் அக்லி படத்தில் இளையராஜா இசையமைத்த பாடல்களை நீக்கி இருப்பதாகவும், மூன்று பாடல்களையும் பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் கூறப்பட்டது.
தொடர்ந்து, சோனி நிறுவனம் தாக்கல் செய்துள்ள வழக்கில் தங்களையும் இணைக்கக் கோரி இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளதாக இளையராஜா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மனுக்கள் மீதான விசாரணையை அக்டோபர் 23-க்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.