
போரூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பணியில் இல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்டார் பிரபல நடிகர் கஞ்சா கருப்பு.
சென்னை போரூரில் நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெற இன்று (பிப்.11) காலை 10 மணிக்கு இந்த மருத்துவமனைக்குச் சென்றுள்ளார் நடிகர் கஞ்சா கருப்பு. அப்போது அங்கே மருத்துவர்கள் இல்லாததால் அவர் நீண்ட நேரம் காக்க வைக்கப்பட்டுள்ளார்.
மேலும், அவரைப் போலவே பல நோயாளிகளும் மருத்துவரைப் பார்க்க காத்திருந்ததாகக் கூறப்படுகிறது. நீண்ட நேரம் காக்க வைக்கப்பட்டதால் ஒரு கட்டத்தில் அங்கிருந்த மருத்துவமனை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடத் தொடங்கினார் கஞ்சா கருப்பு.
நீண்ட நேரமாக காத்திருக்கும் தன்னைப் போலவே நாய் கடித்த ஒருவர், மண்டை உடைந்த ஒருவர் எனப் பல நோயாளிகள் அங்கே காத்திருப்பதாகவும், குறிப்பாக கவலைக்கிடமாக நிலையில் மருத்துவமனைக்கு வந்த வயதான மூதாட்டி ஒருவரைப் பார்க்கக்கூட அங்கே மருத்துவர்கள் இல்லை என்று குற்றம்சாட்டி அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மருத்துவமனை வளாகத்தில் நின்று கொண்டு இந்த விவகாரம் தொடர்பாக பேசிய கஞ்சா கருப்பு, `அரசு மருத்துவர்கள் ரூ. 2.5 லட்சம் சம்பளத்தை வாங்கிக்கொண்டு தனியாக கிளினிக் அமைத்துக் கொண்டு அங்கு சிகிச்சை அளிக்கிறார்கள். அதனால் மருத்துவர்கள் அரசு மருத்துவமனையைக் கண்டுகொள்ளாமல் விட்டு விடுகிறார்கள்’ என்று குற்றம்சாட்டினார்.
மேலும், இதுகுறித்து சுகாதார அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.