கங்கை அமரன்
கங்கை அமரன்

மனுஷனுக்கு எப்போதும் நன்றி வேண்டும்: வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன்

“வைரமுத்து நல்ல பாடலாசிரியரே தவிர நல்ல மனுஷன் கிடையாது, நல்ல புத்தி கிடையாது”.

இளையராஜா குறித்து இனி குறைக் கூறினால், அதன் விளைவுகளை சந்திக்க நேரிடும் என வைரமுத்துவை கங்கை அமரன் எச்சரித்துள்ளார்.

இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களின் காப்புரிமை தொடர்பான வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ‘படிக்காத பக்கங்கள்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பாடலாசிரியர் வைரமுத்து, “இசையும் பாடல் வரிகளும் இணைந்தால்தான் நல்ல பாடல் உருவாகும். சில சமயங்களில் இசையை விட மொழி சிறந்ததாகத் திகழும் சந்தர்ப்பங்கள் உண்டு. இதைப் புரிந்து கொண்டவன் ஞானி, புரிந்து கொள்ளாதவன் அஞ்ஞானி” என பேசியிருந்தார்.

இதைத் தொடர்ந்து இந்த கருத்து இளையராஜாவை அவமதிக்கும் வகையில் உள்ளதாகக் கூறி, இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன் காணொளி ஒன்றில் பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது: “எங்களால் வளர்ந்தவர் வைரமுத்து. மனுஷனுக்கு எப்போதும் நன்றி வேண்டும். அவர் வரிகளை வேண்டாம் என இளையராஜா மறுத்திருந்தால் வைரமுத்துவுக்கு எதிர்காலமே இல்லாமல் போயிருக்கும். அவருக்கு பேரும் புகழும் நிறைய கிடைத்ததால், கர்வம் தலைக்கு ஏறிவிட்டது.

ஒரு நல்ல நட்பை இப்படி கொச்சைப்படுத்துவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஒரு பாடலுக்கு இசை என்பது மிகவும் முக்கியம்.

வைரமுத்து நல்ல பாடலாசிரியரே தவிர நல்ல மனுஷன் கிடையாது, நல்ல புத்தி கிடையாது. இளையராஜாவை குற்றம் சாட்டவேண்டும் என்றே வைரமுத்து பேசுகிறார்.

இளையராஜாவுக்கு ஒரே தம்பி நான் தான் இருக்கிறேன். இதையெல்லாம் பார்த்துவிட்டு நான் அமைதியாக இருக்க மாட்டேன். வைரமுத்து அவர்களை வாழவைத்த இளையராஜாவை, ஃபோட்டோ வைத்து அவர் கும்பிட வேண்டும். இனி இளையராஜாவை பற்றி குறையோ குற்றமோ சொன்னீர்கள் என்றால் அதற்கான விளைவுகளை நீங்கள் வேறு மாதிரி சந்திக்க வேண்டியிருக்கும்” என்றார்.

logo
Kizhakku News
kizhakkunews.in